கடல்கள் பூமியின் 71 சதவீத பரப்பை ஆக்கிரமித்துள்ளன. உயிர்களின் சுவாசத்திற்குத் தேவையான 70 சதவீத பிராண வாயுவையும் கடல்களே உற்பத்தி செய்கின்றன. அரிய உயிரினங்களின் சரணாலயமாகவும் கடல்கள் திகழ்கிறது. கடல் மாசு ஏற்பட்டால், அது கடல்வாழ் உயிரினங்களுக்கு மட்டுமின்றி, நமக்கும்தான் இழப்பு என்பதற்கு எச்சரிக்கை மணியாக தற்போது தமிழ்நாடு கடலோர மாவட்டங்களில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
என்ன மாற்றம்?
தமிழ்நாடு கடலோர மாவட்டங்களில் வாழும் மீனவர்கள் கடலுக்கு செல்லும்போது, அதில் தூசிகள், கழிவுப் பொருட்கள் மற்றும் குப்பைகள் வழக்கத்திற்கு மாறாக அதிகளவில் இருப்பதாக தெரிவித்தனர். கடந்த ஒரு வார காலமாக இப்பிரச்னை தொடர்ந்து வருகிறது. வெளிமாநிலத்திலிருந்து குப்பைகள், கழிவுகளை நம் மாநில கடற்பரப்பில் கொட்டுவதுதான் இதற்கு காரணம், காற்றின் மூலம் அவை வடக்கு நோக்கி நகர்ந்திருக்கலாம் என மீனவர்கள் சந்தேகத்தைக் கிளப்பியுள்ளனர்.
மழைக்காலங்களில் குப்பை மேடாகும் கடல்!
மீனவர்களின் கருத்துக்களின்படி, வழக்கமாக மழைப்பொழிவு அதிகமாக இருந்தால், கடலுக்குவரும் உபரி நீரில் குப்பைகள், கழிவுப்பொருள்கள் அதிகமாக அடித்து வரப்படும். இது ஓரிரண்டு நாட்களுக்கு பிறகு ஆழ்கடலுக்குள் சென்றுவிடும், இம்முறை பத்து நாள்களுக்கு அதிகமாக கழிவுப்பொருள்கள் கடலில் தென்படுகின்றன. இக்கழிவுகள் கடல் உயிரினங்களைப் பாதிப்பதோடு, மீனவர்களின் படகு இயந்திரத்திலும் உள்புகுந்து தொழில்நுட்பகோளாறு ஏற்பட வழிவகுப்பதாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
உயிருக்கு ஆபத்தான சூழல்
கடலில் சேகரமாகும் குப்பைகளால் ஏற்படும் பாதிப்பு குறித்து நொச்சிக்குப்பத்தைச் சேர்ந்த எத்திராஜ், ’இம்மாதியான குப்பைகளால் விசைப்படகுகள் மீன் பிடிக்கும்போது, கவிழும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எங்கள் பகுதியில் இம்மாதிரியான சம்பவம் இரண்டு அல்லது மூன்று முறை நிகழ்ந்துள்ளது. இது மீனவர்களின் உயிருக்கும் ஆபத்து விளைவிக்கும் வகையில் அமையும். இரவு நேரத்தில் மீன் பிடிக்கும்போது உயிரைக் கையில் பிடித்துக்கொண்டிருக்கிறோம்’ என அச்சம் தெரிவித்தார்.
தென்னிந்திய மீனவர் சங்க தலைவர் கே பாரதி, ’புயல் நேரங்களில் இந்த மாதிரியான நிகழ்வுகள் சாதாரணமான ஒன்று. மழைக்காலங்களில் செடி, கொடிகள் அதிகமாக வந்தாலும், அதனால் மீன்பிடி தொழிலில் அதிக பாதிப்பு இருக்காது. மீன் பிடிக்கும் வலைகளில் சில நேரங்களில் பிளாஸ்டிக் மற்றும் சிறிய குப்பைகள் மாட்டிக்கொள்ளும். இப்போது, கடந்த ஒரு வார காலமாக, பெரிய அளவில் குப்பைகள், கழிவுப்பொருட்கள் காணப்படுகின்றன. இதனால், தொழிலும் பெரிதளவு பாதிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் மீன் வளத்துறை அலுவலர்கள் இதனை கவனத்தில் எடுத்துக்கொண்டு ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும்’ என வலியுறுத்தினார்.
படகுகள் சேதமாவதால் அதிகம் செலவு செய்ய வேண்டியுள்ளது. மீன் பிடிக்கக் கொண்டு செல்லும் வலைகளில் குப்பைகளை வாரிக்கொண்டு வருகிறோம் என செங்கல்பட்டு, ஈஞ்சம்பாக்கத்தை சார்ந்த மீனவர், கௌரிலிங்கம் வருத்தம் தெரிவித்தார்.
இந்திய விலங்கியல் ஆய்வு மையத்தின் முன்னாள் இயக்குநர் மற்றும் ஆராய்ச்சியாளருமான, கே வெங்கடராமன் நம்மிடம் கூறியதாவது:
"இது மாதிரியான நிகழ்வுகளுக்கு இரண்டு வகையான காரணங்கள் உண்டு. கடல் நீரோட்டம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்திலிருந்து மார்ச் வரையிலான ஆறு மாத காலத்திற்கு தெற்கிலிருந்து, வட திசை நோக்கி அதிகமாக இருக்கும்.
இரண்டாவது, கப்பல்களின் வருகை அதிகமாக இருப்பதால், கழிவுகளை அதிகமாக நம்முடைய வங்காள விரிகுடா கடல் எல்லைகளில் கொட்டுவதற்கு, வாய்ப்புகள் அதிகம். கிழக்கு கடற்கரை முழுவதும் இந்த குப்பைகளைக் காண முடியும். கடலோர காவற்படை, கப்பற்படை கடல் எல்லைகளில் கண்காணிப்பு அமைப்பினை தீவிரப்படுத்த வேண்டும். இது மாதிரி நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டே இருந்தால், கடல் மாசுபாடு அதிகரிக்ககூடும். இது மனித இனத்திற்கும் ஒரு அச்சுறுத்தல்’ என்று கூறினார்.
இதையும் படிங்க: கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்: 'கடல்சார் உயிரினங்கள் அழியும்' - கே.பாரதி