தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சிப் பகுதிகளுக்கான தேர்தல் ஒன்பது மாவட்டங்கள் நீங்கலாக நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி, கடந்த 27ஆம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. இந்தத் தேர்தலில், 76 புள்ளி 19 சதவீத வாக்குகள் பதிவாகின.
அதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. 27 மாவட்டங்களிலுள்ள 46 ஆயிரத்து 639 ஊரக உள்ளாட்சி ஒன்றியங்களுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கிய மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
இதில் 25,008 வாக்குச் சாவடிகளில் நடைபெறவுள்ள இரண்டாம் கட்டத் தேர்தலில் 1 கோடியே 28 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். 1,551 வாக்குச் சாவடிகளில் வீடியோ கவரேஜ் வசதிகள் செய்யப்பட்டு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் கண்காணிக்கப்படவுள்ளது. மேலும், நுண் பார்வையாளர்கள் 2939 பேரும், பறக்கும் படைகள் எண்ணிக்கை 495 பேர் குழுக்களும் கண்காணிப்பில் ஈடுபட உள்ளது.
இந்நிலையில், கடந்த 27ஆம் தேதி நடைபெற்ற முதல்கட்ட தேர்தலில் பல்வேறு காரணங்களால் பாதிப்பிற்கு உள்ளான தருமபுரி மாவட்டம் சிட்லிங், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை, மதுரை மாவட்டம் சென்னகரம்பட்டி, நாகப்பட்டினம் மாவட்டம் கொள்ளிடம், பெரம்பலூர் மாவட்டம் பெருமாத்தூர், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை, தஞ்சாவூர் மாவட்டம் செம்மங்குடி, திருவள்ளூர் மாவட்டம் பாப்பரம்பால்கம் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் நெடுங்குளம் ஆகிய பகுதிகளுக்கு மறு வாக்குப் பதிவு இன்று நடைபெறும் என எதிர்பார்த்த நிலையில், 31ஆம் தேதி மறு வாக்குப் பதிவு நடைபெறும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தல்: 2ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!