சென்னை: ''பள்ளிக்கல்வித்துறையில் ஆணையர் பணியிடத்தை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும். கல்வித்துறையில் நிபுணத்துவம் வாய்ந்தவர்களே கல்வித்துறையை சிறப்பாக வழிநடத்த முடியும் என்ற அடிப்படையில் மீண்டும் இயக்குநர் பணியிடத்தை கொண்டு வர வேண்டும்'' என தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றச் சங்கம் முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றச் சங்கத்தின் மாநிலத் தலைவரும், ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளரும்
அதன் செய்தித் தொடர்பாளருமான தியாகராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பேற்ற காலம் கரோனா நெருக்கடி மிகுதியாக இருந்த காலம். அக்காலங்களில் 11 சதவீதம் மட்டுமே அகவிலைப்படியை உயர்த்துவார் என்று எதிர்பார்த்து காத்திருந்த வேளையில் 14 சதவீதம் உயர்த்தி வழங்கியிருந்தார்.
மேலும் ஒன்றிய அரசு அறிவித்து ஆறு மாத கால இடைவெளிக்குப் பிறகு மாநில அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அறிவித்ததின் மூலம் மிகுந்த இழப்பு ஏற்பட்டதையும் முதலமைச்சருக்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றச் சங்கம் சுட்டிக்காட்டி இருந்தது.
இந்த நிலையில் தற்பொழுது அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தி 38 சதவீதத்திலிருந்து 42 சதவீதமாக தமிழ்நாடு முதலமைச்சர் ஆணை வெளியிட்டிருக்கிறார். மேலும் இனிவரும் காலங்களில் ஒன்றிய அரசு எப்போது எல்லாம் அகவிலைப்படி உயர்த்தி அறிவிக்கிறதோ, அப்பொழுது உடனடியாக மாநில அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு உயர்த்தி வழங்கப்படும் என நம்பிக்கையும் அறிவித்து உள்ளார்.
இதன் மூலம் என்றென்றைக்கும் ஆசிரியர் அரசு ஊழியர்களின் பாதுகாவலனாக திமுக அரசு இருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் இருப்பார் என்ற நம்பிக்கை ஆசிரியர்கள் மத்தியில் எழுந்துள்ளது. மேலும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் சரண்டர் விடுப்பு ஒப்படைப்பு மற்றும் வாழ்வாதார கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை விரைவாக நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை அரசு ஊழியர்கள் ஆசிரியர்களிடையே எழுந்துள்ளது. அகவிலைப்படி உயர்த்தி வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சருக்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றச் சங்கத்தின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
மேலும் எங்களுடைய நீண்ட நாள் கோரிக்கையான ஆணையர் பணியிடத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதை பரிசீலனை செய்து முதல்கட்டமாக ஆணையரை பணியிடை மாற்றம் செய்த தமிழ்நாடு முதலமைச்சர் கடந்து சில நாட்களுக்கு முன்பாக ஆணை பிறப்பித்துள்ளார்.
எங்களுடைய நீண்ட நாள் கோரிக்கையான பள்ளிக்கல்வித்துறையில் ஆணையர் பணியிடத்தை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும். கல்வித்துறையில் நிபுணத்துவம் வாய்ந்தவர்களே கல்வித்துறையை சிறப்பாக வழிநடத்த முடியும். விரைவில் ஆணையர் பணியிடத்தை முற்றிலுமாக ரத்துசெய்து மீண்டும் இயக்குநர் பணியிடத்தை கொண்டு வந்து கோரிக்கையை தமிழ்நாடு முதலமைச்சர் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர், மேலும் தமிழ்நாட்டிற்கு என்று ஒரு கல்விக் கொள்கையை தனியாக உருவாக்க ஒரு குழுவை அமைத்து இந்தியா முழுமைக்கும் ஒரு முன்மாதிரி முதலமைச்சராகத் திகழ்ந்து கொண்டிருக்கிறார் . அவரின் எண்ணம் முற்றிலும் ஈடேற மீண்டும் பள்ளிக்கல்வித்துறையில் இயக்குநர் பணியிடத்தை விரைவில் கொண்டு வருவது சிறப்பாக இருக்கும். ஆணையர் பணியிடத்தை ரத்து செய்து இயக்குநர் பணியிடம் அனுமதித்தல் என்ற ஆணையை விரைவில் வழங்குவார் என்று நம்பி காத்துக் கொண்டிருக்கிறோம்'' என அதில் கூறியுள்ளார்.