சென்னை ராயப்பேட்டையில் உள்ள பாலாஜி நகரில் கடந்த பல மாதங்களாக அரசு உரிமம் பெறாத ஒரு நகரும் எரிவாயு நிரப்பும் நிலையம் இயங்கிவருகிறது. இப்பகுதியில் 250-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வசித்துவருகின்றனர்.
இந்த எரிவாயு நிரப்பும் நிலையத்திற்கு அருகே இரண்டு பள்ளிகள் செயல்பட்டுவருகின்றன. மேலும், இதன் அருகிலேயே மின்மாற்றி(டிரான்ஸ்பார்மர்)ஒன்று அடிக்கடி பழுதடைந்து தற்போது வெடிக்கும் நிலயில் உள்ளது. இதனால் அப்பகுதி குடும்பங்கள், குழந்தைகள் அச்சத்துடனே இருந்துவருகின்றனர்.
இந்நிலையில், இதனை அகற்றக்கோரி அப்பகுதி பொதுமக்கள் இன்று காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர். பின்னர் அப்பகுதியில் இயங்கும்வாழ் மக்கள் சங்கத்தைச் சேர்ந்த காயத்ரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்த மாதிரியான எரிவாயு நிலையங்கள் சென்னைக்கு ஒதுக்குப்புறத்தில்தான் அமைக்க வேண்டும். மேலும், மக்களுக்கு இடையூறாக செயல்படக்கூடிய இந்த எரிவாயு நிலையத்தை அகற்றக்கோரி மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் இன்றளவும் காவல் துறை தரப்பில் இருந்து எடுக்கப்படவில்லை.
இதனால் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்க வந்துள்ளோம். பொதுமக்கள் மீது கவனம் கொண்டு அங்கிருந்து உடனே அந்த எரிவாயு நிலையத்தை அகற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.