மத்திய சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சென்னை பாஜக அலுவலகமான கமலாலயத்தில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், "இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை திருத்தச் சட்டத்தால் பாதிப்பில்லை. ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும்.
இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 246இன் கீழ் நாடாளுமன்றம் சட்டங்களை இயற்ற உரிமைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவ்வாறு இயற்றப்பட்ட சட்டங்களை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்பது சட்டத்திற்குப் புறம்பானது.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் சட்டத்திற்கு புறம்பானதாகும். மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு எதிராகவும் போராட்டங்கள் நடைபெறுகிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது தொடந்து செயல்படுத்தப்பட்டுவருவதுதான்.
யார் இந்தியாவில் குடியிருக்கிறார்கள் என்பதற்காக கணக்கெடுக்கப்படுகிறதே தவிர யார் குடிமக்கள் என்பதற்காக கணக்கெடுக்கப்படுவது அல்ல. மக்களுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்குத்தான் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இதை காங்கிரஸ் அரசு செய்தால் சரி என்கிறார்கள், பாஜக செய்தால் மட்டும் தவறா?
தேசிய குடிமக்கள் பதிவேட்டை கொண்டுவர வேண்டும் என ஏற்கனவே மன்மோகன் சிங் அரசு விவாதித்துள்ளது. அப்போது கூட்டணியில் திமுக உள்ளிட்ட கட்சிகள் இருந்தன. இலங்கை அகதிகள் இங்கு வந்தபோது இஸ்லாமியர்களுக்கு ராஜிவ் அரசில் குடியுரிமை வழங்கப்பட்டதா?
பல ஆண்டுகளுக்கு முன் சில விஷயங்கள் தேவைப்படவில்லை. ஆனால், இப்போது தேவைப்படுகிறது. அப்படித்தான் மக்கள் தொகை கணக்கெடுப்பில் சில கேள்விகள் சேர்க்கப்பட்டுள்ளது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: அதிகாரமில்லாதவர்களை சீண்டும் ரஜினியின் வசனங்கள் படங்களை ஓட வைப்பதற்கு மட்டுமே