சென்னை மீனம்பாக்கத்திலுள்ள விமான நிலையத்தில் பன்னாட்டு விமான நிலைய முனையம் பேரறிஞர் அண்ணா பெயரிலும், உள்நாட்டு விமான நிலைய முனையம் பெருந்தலைவர் காமராஜர் பெயரில் செயல்பட்டுவந்தன.
இந்த இரு விமான நிலைய முனையங்களிலும், அவர்களது பெயர்கள் பொறித்த பலகைகளும் வைக்கப்பட்டிருந்தன. இவை சில நாள்களுக்கு முன்பு எவ்வித முன்னறிவிப்பின்றியும் அகற்றப்பட்டுள்ளன.
எவ்வித அரசாணையும் வெளியிடப்படாமல் விமான நிலையங்களில் உள்ள பலகை அகற்றப்பட்டதுடன், விமான நிலையத்தின் பெயர் சென்னை விமான நிலையம் எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கை தமிழ்நாட்டில் பல்வேறு தரப்பினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் நாடாளுமன்றத்தில் சென்னை விமான நிலைய பெயர் மாற்றம் குறித்து மத்திய அரசு பதிலளிக்க வலியுறுத்தி கவன ஈர்ப்பு நோட்டீஸ் அளித்துள்ளார்.
அதில், "மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் கோரிக்கையை ஏற்று அப்போதைய பிரதமர் வி.பி. சிங்கால் சென்னை விமான நிலையத்திற்கு அறிஞர் அண்ணா, காமராஜர் பெயர் சூட்டப்பட்டது.
அந்தப் பெயரை மத்திய அரசு நீக்கி தற்போது சென்னை விமான நிலையம் எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டு மக்களிடைய பேசுபொருளாகியுள்ளது. எனவே, இதுதொடர்பான விளக்கத்தை வழங்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.