சென்னை: இதுதொடர்பாக ஒன்றிய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், கரோனா பெருந்தொற்றால் நாட்டு மக்கள் படும் அல்லல்களைத் தாங்கள் நன்கு அறிவீர்கள் என நம்புகிறேன். கோவிட் 19 என்னும் பெருந்தொற்று பொது சுகாதாரப் பிரச்சனையாக மட்டுமின்றி இந்த நாட்டின் குடிமக்கள் ஒவ்வொருவரது பொருளாதார பிரச்சினையாகவும் மாறியிருக்கிறது. அரசாங்கத்தின் சுகாதாரக் கட்டமைப்புகள் எவ்வளவுதான் சிறந்தவையாக இருந்தாலும், அனைவருக்கும் சுகாதாரம் என்பது தொலைதூரக் கனவாகவே இருக்கிறது. அதனால்தான் நமது அரசு தேசிய சுகாதார கொள்கை -2017ஐ கொண்டுவந்தது.
அனைவருக்கும் சுகாதாரம்
அந்தக் கொள்கையில் 'மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5 விழுக்காட்டை சுகாதாரத் துறைக்கு ஒதுக்குவது என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. கெடுவாய்ப்பாக அதன் பின்னர் வந்த ஒன்றிய அரசு நிதிநிலை அறிக்கைகளில் சுகாதாரத் துறைக்கான நிதி ஒதுக்கீடு குறைந்துகொண்டே வந்தது. அதனால், மக்கள் தனியார் மருத்துவமனைகளாக இருந்தாலும் சரி, அரசு மருத்துவமனைகளாக இருந்தாலும் சரி தமது கையிலிருந்தே மருத்துவத்துக்கு செலவழிக்கும் நிலை ஏற்பட்டது.
'
ஒவ்வொருவரும் தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் நல்ல உணவு, உடை, இருப்பிடம், சுகாதார வசதிகளை அளிக்கின்ற தரமான வாழ்க்கையை வாழ்வதற்கு உரிமை படைத்தவர்’ என ஐநா மனித உரிமை சாசனத்தின் உறுப்பு 25 கூறுகிறது. நமது அரசியல் அமைப்புச் சட்டம் சுகாதாரத்தை அடிப்படை உரிமைகளில் ஒன்றாக வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்றாலும் அதில், பொதுச் சுகாதாரம் குறித்தும், குடி மக்களுக்கு சுகாதார வசதிகளை அரசு செய்து தர வேண்டியதன் அவசியம் குறித்தும் பல்வேறு இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. சுகாதார உரிமைக்கான அடிப்படையை அரசியலமைப்புச் சட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கியுள்ளன.
சுகாதரம் அடிப்படை உரிமை என்று கூறும் நீதிமன்ற தீர்ப்புகள்
'பந்து வா முக்தி மோர்ச்சா எதிர் யூனியன் ஆஃப் இந்தியா மற்றும் பலர்' என்ற வழக்கில் உச்ச நீதிமன்றம் அரசியலமைப்புச் சட்டத்தின் உறுப்பு 21ல் உத்திரவாதப்படுத்தப்பட்டுள்ள உயிர் வாழ்வதற்கான உரிமை என்பதை சுகாதாரத்திற்கான உரிமை என்று பொருளுரைத்துள்ளது. 2019ஆம் ஆண்டு செப்டம்பரில் 15வது நிதிக் குழுவின் கீழ் அமைக்கப்பட்ட உயர்மட்ட குழு, 'சுகாதார வசதிகளுக்கான உரிமையை அடிப்படை உரிமைகளில் ஒன்றாக ஆக்க வேண்டும்' என்று பரிந்துரை செய்துள்ளது.
கடந்த மே 21ஆம் தேதி டெல்லி உயர் நீதிமன்றம் குருசரன்சிங் எதிர் இந்திய அரசு என்ற வழக்கில் தீர்ப்பளிக்கும் போது, 'போர், பஞ்சம், வெள்ளம், பெருந்தொற்று மற்றும் பேரழிவு காலங்களின்போது அரசு வரிகளைக் குறைத்து குடிமக்கள் மீதான சுமையை மட்டுப்படுத்த வேண்டும். அது அரசியலமைப்புச் சட்டத்தின் உறுப்பு 21ல் உறுதிப்படுத்தப்பட்டுள்ள கண்ணியமான வாழ்க்கை என்பதை ஒரு மனிதன் வாழ்வதற்கு வழிவகுக்கும்' என்று தெளிவுபடுத்தி இருக்கிறது.
அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் வேண்டும்
20 ஆண்டுகளுக்கு முன்னால் 2002ஆம் ஆண்டு ஏ.பி. வாஜ்பாய் தலைமையில்தான் கல்வி அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகளில் ஒன்றாக ஆக்கப்பட்டது. அதுபோல அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்து சுகாதாரத்துக்கான உரிமையை அடிப்படை உரிமைகளில் ஒன்றாக ஆக்குவதற்கு இதுவே தகுந்த தருணம் ஆகும். எனவே, எதிர்வரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் அரசியலமைப்புச் சட்டத்தின் உறுப்பு 21-ல் திருத்தம் செய்து சுகாதாரத்துக்கான உரிமையை அடிப்படை உரிமையாக ஆக்குவதற்கு மசோதா ஒன்றை தாங்கள் கொண்டு வர வேண்டும் என்று வேண்டுகிறேன் என குறிப்பிட்டுள்ளார். இக்கடிதத்தின் நகலொன்று ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'சமத்துவமே பௌத்தத்தின் இறுதி இலக்கு' - திருமாவளவன்