சென்னை: இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே பிரதமர் மோடியுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையில், இலங்கை அரசியல் அமைப்பின் 13வது சட்டத் திருத்தம் முக்கியத்துவம் பெறுகிறது. மறைந்த முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் முயற்சியால், 1987ஆம் ஆண்டு ஜூலை 29 அன்று இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையேயான ஒப்பந்தம் கையெழுத்தானது.
அதன் அடிப்படையில் உருவானதே தமிழருக்கு அரசியல் அதிகாரம் அளிக்க வகை செய்யும் இந்த 13வது சட்டத் திருத்தம். இலங்கை அரசியல் களத்தில் மீண்டும் பேசுபொருளாக உள்ளது குறித்து இலங்கையின் வட மாகாண முன்னாள் அமைச்சர் கந்தையா சர்வேஸ்வரன் ஈடிவி பாரத் தமிழ்நாடு செய்திகளுக்கு பிரத்யேக பேட்டியை அளித்துள்ளார்.
13வது சட்டத் திருத்தம் என்பது என்ன? 1985ஆம் ஆண்டில் நடைபெற்ற ஈழ ஆயுதக் குழுக்களை உள்ளடக்கிய திம்பு பேச்சுவார்த்தை மற்றும் அதன் தொடர்ச்சியாக இந்தியா மேற்கொண்ட முயற்சிகளின் வழியாக, 1987 ஜூலை மாதத்தில் இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்கும் ஒப்பந்தம் கையெழுத்தானது.
அதன் அடிப்படையில், இலங்கை அரசியல் சாசனத்தில் 13வது சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டு, வடக்கு - கிழக்குப் பிராந்தியங்கள் இணைந்த வடகிழக்கு மாகாணம் உருவாக்கப்பட்டது. இந்தியா - இலங்கை ஒப்பந்தத்தில் இது தமிழரின் பூர்வீக வாழ்விடம் என ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
ராஜபக்சே ஆட்சியின்போது, இலங்கை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, வட-கிழக்கு மாகாண இணைப்பு ரத்து செய்யப்பட்டது. இது தமிழருக்கு இழைக்கப்பட்ட துரோகம். இந்தியாவும் இதனை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. இந்த 13வது சட்டத் திருத்தம் காவல் துறை, நிலம் ஆகிய இரண்டு முக்கிய அம்சங்களை மாகாண அரசுக்கு கொடுத்தாலும், கடந்த 36 வருடங்களாக இலங்கை அரசு இவற்றை விட்டுக் கொடுக்கவில்லை. கொடுமை என்ன என்றால், தான் பதவிப் பிரமானம் எடுத்துக்கொள்ளும் அரசியல் சாசனத்தை நடைமுறைப்படுத்த அதிபர் மறுக்கிறார்.
நடைமுறைப்படுத்துவதில் உள்ள தடைகள் என்ன? சிங்கள-பௌத்த பேரினவாத அரசும், அரசியல் கட்சிகளும் அதிகாரப் பரவலை மூர்க்கமாக எதிர்க்கின்றன. தமிழர்களின் அரசியல் உரிமைகளை ஏற்க மறுக்கின்றன. இதுவே முன்னர் ஆயுதப் போராட்டத்திற்கு காரணமானது. 2009 போரின் முடிவுக்குப் பிறகு, ராஜபக்சே 13 ++ (ப்ளஸ் ப்ளஸ்) என்று சொல்லி, எங்களையும் சர்வதேச சமூகத்தையும் ஏமாற்றினார். தற்போது ரணிலும் அதனையே கடைபிடிக்கிறார்.
தமிழருக்கான அதிகாரப் பகிர்வை, அதிகாரப் பரவலாக குறுக்கி, பிற மாகணங்களில் ஒன்றாக, அதிகாரமற்ற ஒன்றாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் முடக்கப்பட்டுள்ளன. சட்டம் இயற்றினால் அதனை செயல்படுத்த, சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட காவல் துறை உள்ளிட்ட நிர்வாக அமைப்பு வேண்டும். 1976 வட்டுக்கோட்டை தீர்மானம், தனித்தமிழீழத்தை வலியுறுத்தியது.
இந்தியா என்ன செய்ய வேண்டும்? இந்திய - இலங்கை ஒப்பந்தத்தில், இலங்கைத் தமிழர்களின் சார்பில் கையெழுத்திட்ட இந்தியாவுக்க, ஒப்பந்தத்தை நிறைவேற்றும் கடப்பாடு உள்ளது. எங்களது காப்பாளராக இந்தியா கையெழுத்திட்டுள்ளது. இலங்கைக்கு அளிக்கும் பொருளாதார உதவி, தமிழருக்கான உரிமைகளை பெற்றுத்தரும் சூழலைத் தருகிறது. பாலம் அமைப்பதும், வீடுகள் கட்டித் தருவதும் அரசியல் அதிகாரம் இல்லாத நிலைமையில் என்ன பாதுகாப்பைத் தந்து விடும்? மீண்டும் பேரினவாத அழித்தொழிப்புக்கு இலக்காகாதா என்ன?
தமிழர் பகுதிகளே, இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இந்தியாவின் பாதுகாப்பு அரண். ஆனால், கிழக்கு மாகாணத்தில் சிங்கள குடியேற்றம் மற்றும் அங்குள்ள இஸ்லாமியர், போருக்குப் பின் எண்ணிக்கையில் தமிழரை விட அதிகம் உள்ளனர். இந்த நிலைமை கவலை அளிக்கிறது. இது இந்திய அரசுக்கும், அதிகாரிகளுக்கும் தெரியாதது அல்ல. புவி அரசியல் நோக்கிலும், தார்மீக அடிப்படையிலும், இந்தியா இலங்கை அரசு மீது தாமதம் இல்லாமல் அழுத்தம் கொடுத்து, தமிழருக்கான அரசியல் உரிமைகளை பெற்றுத் தர வேண்டும்.
இதையும் படிங்க: ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் புதிய சாதனை!