சென்னை: நாட்டில் 73ஆவது குடியரசுத் தினவிழா நேற்று (ஜன.26) கொண்டாடப்பட்டது. அதன்படி, சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கியில், மண்டல இயக்குநர் சுவாமி தலைமையில் விழா நடைபெற்றது. அப்போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டபோது ஆர்பிஐ அலுவலர்கள் எழுந்து நிற்காமல் இருந்தனர்.
இது குறித்து செய்தியாளர்கள் ஆர்பிஐ அலுவலர்களிடம் கேள்வி எழுப்பிய போது, அவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு எழுந்து நிற்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் நீதிமன்ற உத்தரவும் அப்படியே இருப்பதாகவும் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்த வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு தமிழ் ஆர்வலர்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரமுகர்கள் கடும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். இதனிடையே , சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ராஜேஷ் என்பவர் தமிழ்த்தாய் வாழ்த்தின்போது எழுந்த நிற்காத ரிசர்வ் வங்கி அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு சென்னை காவல் ஆணையத்தில் ஆன்லைன் மூலம் புகார் அளித்துள்ளார்.
இது கண்டிக்கத்தக்கது
இதனிடையே பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், "சென்னை ரிசர்வ் வங்கியில் நடைபெற்ற குடியரசு நாள் விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்ட போது, அலுவலர்கள் எழுந்து நின்று மரியாதை செலுத்தத் தவறிவிட்டனர். அதுமட்டுமின்றி அவ்வாறு செய்யத் தேவையில்லை என்றும் கூறியுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது.
தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ்நாடு அரசின் மாநிலப்பாடலாக கடந்த திசம்பர் 17ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு எழுந்து மரியாதை செலுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இப்படி இருக்கையில் ரிசர்வ் வங்கி அலுவலர்கள் திட்டமிட்டே இதை செய்ய மறுத்திருப்பது தமிழ்த்தாயை அவமதிக்கும் செயல்.
தமிழனின் உணர்வாக
மத்திய அரசு அலுவலர்களாக இருந்தாலும் தமிழ்நாட்டின் விதிகளை மதிக்க வேண்டும். தமிழ்த்தாயை அவமதித்தவர்களை மன்னிக்கக்கூடாது. இதுகுறித்து புகார் வந்தால் தான் நடவடிக்கை எடுப்போம் என அரசும், காவல்துறையும் காத்திருக்காமல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தாய் வளர்த்து நாம் வளர்ந்தோம். தமிழ் வளர்த்து நாம் வாழ்வோம் என்பது தான் ஒவ்வொரு தமிழனின் உணர்வாக இருக்கட்டும். ஆனால், தமிழ்நாட்டில் இருந்தும், தமிழனாக இருந்தும் தமிழ்த்தாயை மதிக்க மறுப்பவர்களை என்ன செய்வது? என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: 'மாநிலப் பாடல் தமிழ்த்தாய் வாழ்த்து' பாடப்படும்போது எழுந்து நிற்பது கட்டாயம் - அரசாணை