நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, "ஒட்டுமொத்த இந்தியாவின் தலையெழுத்தையும் தீர்மானிக்கும் மக்களவைத் தேர்தல்கள் தொடங்கி விட்டன. முதற்கட்டமாக 91 தொகுதிகளில் நேற்று வாக்குப்பதிவு அமைதியாக நிறைவடைந்திருக்கிறது.
இரண்டாம் கட்டமாக தமிழ்நாடு, புதுச்சோி உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 97 தொகுதிகளில் வரும் 18ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது.தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல்கள் மட்டுமின்றி, காலியாக உள்ள 22 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களுக்கான வாக்குப்பதிவும் வரும் 18ஆம் தேதி நடைபெறவுள்ளது. மக்களவைத் தேர்தல்களைப் போலவே சட்டப்பேரவைத் தேர்தலும் மிகவும் முக்கியமானதாகும். இந்தத் இரு தேர்தல்களுக்குமான பரப்புரை நிறைவடைய இன்னும் 4 நாட்கள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன.
ஓர் ஓவியத்தை வரையும் போது முதலில் மற்ற பகுதிகளையெல்லாம் வரைந்து விட்டு, இறுதியாக அந்த ஓவியத்தின் கண்களை வரைவார்கள். கண்களை வரைவது சிறிய பணிதான் என்றாலும், அது தான் ஓவியத்தை முழுமையாக்கும்; ஓவியத்திற்கு உயிரைக் கொடுக்கும். அதேபோல்தான் தேர்தல் பரப்புரையும்.
மக்களவைத் தேர்தலுக்கான அதிமுக தலைமையிலான கூட்டணியின் தொகுதிப் பங்கீடும், வேட்பாளர்கள் பட்டியலும் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து இன்று வரை பாட்டாளிகளும், கூட்டணி கட்சியினரும் மேற்கொண்டு வரும் களப்பணிகள் மிகவும் சிறப்பானவை என்றாலும் கூட, ஓவியத்திற்கு கண்களை வரைவதைப் போன்று, அடுத்து வரும் 4 நாட்களுக்கான பணிகள் முக்கியமானவை.
அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சி, பாரதிய ஜனதா, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளின் தொண்டர்களும், தேர்தலில் போட்டியிடாமல் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள 25க்கும் மேற்பட்ட கட்சிகளின் நிர்வாகிகளும் ஆற்றி வரும் களப்பணிகள் மிகவும் அற்புதமானவை.
மார்ச் மாதம் 20ஆம் தேதி தேர்தல் பரப்புரையைத் தொடங்கிய நான் இதுவரை மொத்தம் 22 மக்களவைத் தொகுதிகளிலும், 12 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் பரப்புரை மேற்கொண்டுள்ளேன். இந்தத் தொகுதிகள் அனைத்திலும் அதிமுக தலைமையிலான கூட்டணிக் கட்சி வேட்பாளர்களின் வெற்றிவாய்ப்பு பிரகாசமாக இருப்பதை நானே நேரில் பார்த்து அறிந்தேன்
அடுத்த 4 நாட்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சியினர் உட்பட அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள அனைத்துக் கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் மிகவும் விழிப்புடனும், கடமை உணர்வுடனும் தேர்தல் பணியாற்ற வேண்டும். வாக்குச்சாவடிவாரியாக அமைக்கப்பட்டுள்ள குழுக்களைச் சேர்ந்தவர்கள் அடுத்து வரும் நாட்களில் ஒவ்வொரு வாக்காளரையும் குறைந்தது 10 முறையாவது சந்தித்து அந்தந்த மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தொகுதிகளின் வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து வெற்றி பெற செய்ய வேண்டும்" எனக் கூறியிருந்தார்.