5 மற்றும் 8ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நடத்தப்படும் பொதுத்தேர்வினை ரத்து செய்யக் கோரி போராட்டம் நடத்தப்படும் என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாட்டில் 5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை செய்து முடித்துவிட்டது. 5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை கிடப்பில் போட்டு விட்டு, பொதுத்தேர்வை நடத்துவதில் அரசு உறுதியாக இருப்பது கல்விக்கு செய்யும் நன்மையல்ல, மாணவர்களுக்கு செய்யும் தீமையாகும்.
தமிழ்நாட்டில் ஊரகங்களில் உள்ள தொடக்கப்பள்ளிகளில் 48 சதவிகிதம் பள்ளிகள் ஈராசிரியர்களைக் கொண்ட பள்ளிகளாக உள்ளன. இவர்களில் ஓர் ஆசிரியர் பல நேரங்களில் நிர்வாகப் பணிகளுக்காக வெளியில் சென்றுவிடும் சூழலில், மீதமுள்ள ஓர் ஆசிரியர் தான் 5 வகுப்புகளுக்கும் பாடம் நடத்த வேண்டும். இத்தகைய சூழலில் பயிலும் குழந்தைகளுக்கு 5ஆம் வகுப்பில் பொதுத்தேர்வு நடத்துவது மிகப்பெரிய மனித உரிமை மீறலாகும்.
நீட் தேர்வு எந்த அளவுக்கு அர்த்தமற்றதோ, அதேபோல் தான் 5, 8-ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகளும் அர்த்தமற்றவை. நீட் தேர்வை எதிர்க்கும் தமிழ்நாடு அரசு இந்தத் தேர்வுகளையும் எதிர்க்க வேண்டும். அதன்படி 5, 8ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்.
இதனை, வலியுறுத்தி வரும் 28ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை பாட்டாளி மாணவர் சங்கம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட, வட்டத் தலைநகரங்களில் தொடர் முழக்கப் போராட்டம் நடத்தப்படும். சென்னையில் வள்ளுவர்கோட்டம் அருகில் நடைபெறும் போராட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ஜி.கே. மணி தலைமையேற்று நடத்துவார்.
தமிழ்நாடு முழுவதும் நடைபெறவுள்ள இப்போராட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி, பாட்டாளி மாணவர் சங்கம், பாட்டாளி இளைஞர் சங்கம் உள்ளிட்ட துணை அமைப்புகளின் நிர்வாகிகள், சமூகநீதியில் அக்கறை கொண்டவர்கள், கல்வியாளர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொள்வார்கள்' என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பாலியல் குற்ற வழக்குகளில் ஆந்திராவை பின்பற்றவேண்டும் - ராமதாஸ்