உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட கடல் ரோந்துக் கப்பலான விக்ரஹாவை, இந்திய கடலோரக் காவல் படை ரோந்துக் கப்பல்கள் வரிசையில் ஏழாவதாகச் சேர்த்தல், அதன் சேவை தொடக்க விழா சென்னையில் நாளை (ஆகஸ்ட் 28) நடைபெறுகிறது. இந்தக் கப்பலை ராஜ்நாத் சிங் தொடங்கிவைக்கிறார். இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கிறார்.
இது குறித்து மத்திய பத்திரிகை தகவல் மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள விசாகப்பட்டினத்தை மையமாகக் கொண்டு செயல்படவிருக்கும் இந்தக் கப்பல், கடலோரக் காவல் படையின் கிழக்குப் பகுதி தளபதியின் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும். இந்தக் கப்பல் 98 மீட்டர் நீளம் கொண்டது. அதில் 11 அலுவலர்கள், 110 மாலுமிகள் இருப்பார்கள்.
லார்சன் & டூப்ரோ ஷிப் பில்டிங் லிமிடெட் நிறுவனத்தால் கட்டமைக்கப்பட்டுள்ள இக்கப்பலில் நவீன தொழில்நுட்ப ராடார்கள், தொலைத்தொடர்பு மற்றும் பயணக்கருவிகள், சென்சார்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன. ஒரு 40/60 போஃபொர்ஸ் துப்பாக்கி, இரண்டு 12.7 மி.மீ. ரிமோட் கன்ட்ரோல் துப்பாக்கிகள் உள்ளிட்டவையும் இக்கப்பலில் உள்ளன.
ஒரு ஹெலிகாப்டர், நான்கு அதிவேக படகுகள் ஆகியவற்றைச் சுமந்துசெல்லும் வகையில் கப்பல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கப்பலுடன் சேர்த்து, 157 கப்பல்கள், 66 விமானங்கள் இந்தியக் கடலோரக் காவல் படையிடம் உள்ளன.
இந்நிகழ்ச்சியில் ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் எம்.எம். நரவணே, இந்திய கடலோரக் காவல் படையின் தலைமை இயக்குநர் கே. நடராஜன், மத்திய, மாநில அரசுகளின் மூத்த அலுவலர்கள் பங்கேற்பார்கள்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: புதிய ட்ரோன் சட்டம் 2021 குறித்து மத்திய அரசு தகவல்