முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில், கொலையாளிக்கு பேட்டரி வாங்கிக் கொடுத்ததாகக் கூறி, 1991ஆம் ஆண்டு சிபிஐ பேரறிவாளனைக் கைது செய்தது. 26 ஆண்டுகள் சிறையிலேயே இருந்துவந்த பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட தூக்குத் தண்டனையை ரத்து செய்து 2014ஆம் ஆண்டு ஆயுள் தண்டனையாக மாற்றியது நீதிமன்றம்.
இதற்கிடையே பேரறிவாளன் தந்தை ஞானசேகரனுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவரைப் பார்க்க 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரு மாதம் பரோல் கொடுக்கப்பட்டு மேலும் ஒரு மாத காலமும் நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போதும் பேரறிவாளன் தந்தையின் உடல் நிலை மோசமாக உள்ளதாக, அவரது தாய் அற்புதம்மாள் தரப்பில் பரோல் கேட்டு மனு விண்ணப்பித்துள்ளனர். இந்த விண்ணப்பத்தை பரிசீலினை செய்த தமிழ்நாடு சிறைத் துறை மீண்டும் ஒரு மாதம் காலம் பரோல் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
சென்னை புழல் சிறையிலிருக்கும் பேரறிவாளன் நவம்பர் 18ஆம் தேதி ஒரு மாதம் பரோலில் வெளிவரலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.