சென்னை: பிரபல திரைப்பட ஸ்டண்ட் இயக்குனர் ஜூடோ ரத்தினம் நேற்று (ஜன 26) உயிரிழந்தார். இவரது உடல் சென்னை வடபழனியில் உள்ள ஸ்டண்ட் யூனியன் அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பல திரைப்பிரபலங்களும், அரசியல் பிரமுகர்களும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் நடிகர் சத்யராஜ், மனோபாலா உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். அதன்பின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேரில் வந்து ரத்தினம் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினர் மற்றும் ஸ்டண்ட் யூனியன் உறுப்பினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், “1976ஆம் ஆண்டில் அவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவருக்கு என்று தனியாக ஒரு ஸ்டைல் உருவாக்கிக் கொண்டு அதை திரையுலகிலும் அறிமுகப்படுத்தினார். அவருடைய அசிஸ்டன்ஸ்கள் இன்று பெரிய ஸ்டண்ட் மாஸ்டர்களாக உள்ளனர்.
முரட்டுக்காளை திரைப்படத்தில் ரயிலில் நடைபெறும் சண்டைக்காட்சி போல இதுவரை யாரும் செய்தது இல்லை. 93 வயதில் பூரண வாழ்க்கை வாழ்ந்துள்ளார். அவரது குடும்பத்திற்கு எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.