சென்னை போயஸ் தோட்டத்தில் புதன்கிழமை மாலை செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:
டெல்லி வன்முறைச் சம்பவம் மத்திய உளவுத் துறையின் தோல்வியைக் காட்டுகிறது. டொனால்ட் ட்ரம்ப் போன்ற உலகத் தலைவர்கள் இந்தியா வரும்போது, இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுத்திருக்க வேண்டும். உளவுத் துறையின் தோல்வி என்பது மத்திய உள்துறை அமைச்சகத்தின் தோல்வியைக் காட்டுகிறது.
நாட்டில் மதத்தை வைத்து அரசியல் செய்வதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இது சரியான போக்கு கிடையாது. டெல்லி வன்முறை போன்ற சம்பவங்களை மத்திய, மாநில அரசுகள் இரும்புக்கரம் கொண்டு அடக்கவில்லை என்றால், எதிர்காலத்தில் இது மிகவும் கடினமான சூழலாக மாறும். வன்முறைச் சம்பவங்கள் நடைபெறும் முன்னரே கிள்ளியெறியப்பட வேண்டும். ஒன்று வன்முறையை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும், இல்லையெனில் ராஜினாமா செய்ய வேண்டும்.
சி.ஏ.ஏ. சட்டம், இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, சட்டமாகக் கொண்டுவரப்பட்டுள்ளது. எனக்குத் தெரிந்தவரை, இதை மத்திய அரசு திரும்பப்பெறாது என்று கருதுகிறேன். இது தொடர்பாக எந்தவிதமான போராட்டம் செய்தாலும், உபயோகம் இல்லை. இது போன்ற கருத்துகளை நான் தெரிவிக்கும்போது, பாஜகவுக்கு ஆதரவாளன் என்று மூத்த பத்திரிகையாளர்கள், அரசியல் விமர்சகர்கள் கூறுவதுதான் எனக்கு மனவருத்தத்தை அளிக்கிறது.
என்.ஆர்.சி. குறித்து மத்திய அரசு தெளிவாக விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக நடைபெறும் போராட்டம் வன்முறையாக மாறாமல், அமைதியான முறையில் நடைபெற வேண்டும். இவ்வாறு ரஜினிகாந்த் தெரிவித்தார்.
இதையும் படிங்க:டெல்லி வன்முறை கட்டுக்குள் வந்தது - தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்