ரஜினி மக்கள் மன்றம் சார்பில் தொடங்கப்படுவதாக இருந்த அரசியல் கட்சியின் தலைமை ஒருங்கினைப்பாளாராக ரஜினிகாந்தால் நியமிக்கப்பட்ட அர்ஜூன மூர்த்தி இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், "நடிகர் ரஜினிகாந்திற்கு ஓய்வு தேவை, அரசியலில் செயல்படுவது நல்லது இல்லை என மருத்துவர்கள் ஆலோசனை கூறியுள்ளனர். நாமும் மனிதர்கள்தான் அந்த கஷ்டத்தை நாம் உணர வேண்டும். தமிழ் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டுமென ரஜினி ஆர்வமாக இருந்தார். அவர் உடல்நலம் கருதி எடுக்கப்பட்ட முடிவு இது. அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவரை மக்கள் யாரும் விமர்சிக்க கூடாது.
மக்கள் அனைவரும் அவருடன் இணைந்து உதவிகளையும், ஆதரவையும் கொடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அரசியலில் நான் உழைக்க வந்துள்ளேன் பிழைக்க வரவில்லை. மக்களுக்கு நல்லது செய்வேன் என்று ரஜினி கூறியுள்ளார் எனவே அவருடன் பயணிப்பேன். தமிழ்நாடு மக்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லையே என்ற மன உளைச்சலில் ரஜினி இருக்கிறார்.
ஒரு மாற்றம் வரவேண்டும் என்று ரஜினியிடம் சேர்ந்தேன். என்னுடைய நிலைப்பாடு ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்பதுதான். ஆனால் அதற்கு கடவுள் அருள வேண்டும். எனக்கு ஒரு கண் மோடி, மற்றொரு கண் ரஜினி. இந்திய அளவில் மோடியையும் , தமிழ்நாட்டை மாற்ற வேண்டும் என்று ரஜினியையும் ஆதரிக்கிறேன்" எனக் கூறினார்.
இதையும் படிங்க:கட்சி தொடங்கவில்லை - நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பு