திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் இந்திய குடியரசுக் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு அக்கட்சியின் தலைவர் செ.கு. தமிழரசன் தலைமை வகித்தார்.
அதற்கு முன்னதாக செ.கு. தமிழரசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "மத்திய, மாநில அரசுகள் தாக்கல் செய்த பட்ஜெட் ஒன்றோடு ஒன்று சார்ந்து உள்ளது. இரண்டு கருத்துகளும் ஒரே கருத்தாக அமைந்துள்ளது. ஆனால், இரண்டு பட்ஜெட்களிலும் பட்டியலின சமூக வளர்ச்சிக்கு முன்னுரிமை கொடுக்கப்படவில்லை. இது ஏமாற்றமளிக்கிறது. அதனால் பட்டியலின மக்கள் என்று மத்திய, மாநில அரசுகள் தனி நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும். குறைந்தபட்சம் துணை நிதிநிலை அறிக்கைத் தாக்கல் செய்யவேண்டும்" எனத் தெரிவித்தார்.
மேலும், " ரஜினிக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கும், எதிர்பார்ப்பும் உள்ளது. அதனால் தான் அவரது கருத்துகள் அரசியல்வாதிகள் மத்தியில் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. இத்தகைய விமர்சனங்கள் ரஜினிக்கு செல்வாக்கு இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. ரஜினி கட்சி தொடங்கி கொள்கைகளை அறிவித்தால், அவரது கூட்டணி குறித்து வரவேற்போம்" எனக் கூறினார்.
இதையும் படிங்க...அதிமுக ஆலோசனைக் கூட்டம் - ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் பங்கேற்பு!