அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் மாநில, மாவட்ட பொறுப்பாளர்களின் ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் தலைவர் சரத்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கட்சியை வலுப்படுத்துதல், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியடுதல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.
இக்கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், ‘உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணியுடன் இணைந்து செயல்படுவது குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை எந்த தரப்பினரும் வெற்றியாகவோ, தோல்வியாகவோ கருதாமல் அந்தத் தீர்ப்பினை மதித்து தேச ஒற்றுமையை பாதுகாக்கும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் வெற்றிடம் இருக்கிறது என ரஜினி எதைக் கூறுகிறார் என்பது எனக்கு தெரியவில்லை. ஆளுமைக்கு வெற்றிடமா? தலைமைக்கு வெற்றிடமா என்பதைக் கூறவில்லை. அவர் எதைப் பற்றிக் கூறுகிறார் என்பது எனக்கு தெரியாததால் நான் பதில் அளிக்க முடியாது.
திமுக தலைவர் ஸ்டாலின் வாரிசு அரசியல்தான் நடைபெறும் என ஏற்கனவே கூறியுள்ளார். எனவே அதுபற்றி நான் கருத்து கூற விரும்பவில்லை. திமுக பொதுக்குழுவில் போடப்பட்ட தீர்மானங்களைப் படித்துப் பார்த்தேன். அந்த தீர்மானங்கள் அனைத்தும் அதிமுக மீது அவர்களுக்கு உள்ள அவநம்பிக்கையை காட்டுவதாக உள்ளது. மக்களுக்கான தீர்மானங்கள் எதுவும் இல்லை என்பதுதான் என் கருத்து’ என்றார்.