சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் ஆளுநர் ஆர்.என்.ரவி நிலுவையில் வைத்துள்ளதால், அவற்றிற்கு ஒப்புதல் அளிக்க உத்தரவிடக் கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தது. இந்த வழக்கினை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆளுநர், முதலமைச்சர் நேரில் அழைத்து சுமூகமாகப் பேசி இதற்குத் தீர்வு காண வேண்டுமென அறிவுறுத்தியிருந்தது.
அதன் அடிப்படையில், ஆளுநர் மாளிகை தரப்பிலிருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நேரில் சந்திப்பதற்காக இன்று (டிச.30) நேரம் ஒதுக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், இன்று மாலை 5.30 மணியளவில் ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனை தொடர்பாக ஆளுநர் மாளிகை அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதில், “ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மாநில அரசு விவகாரங்கள் தொடர்பாக விவாதிக்கும் சந்திப்புக்கு அழைத்திருந்தார். அதன்படி முதலமைச்சர், ஆளுநரை இன்று மாலை 5.30 மணியளவில் கிண்டியில் உள்ள ராஜ்பவனில் சந்தித்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, எஸ்.ரகுபதி, ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் மற்றும் மாநிலத் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர், தமிழ்நாடு பொதுத்துறை செயலாளர் ஆகியோரும் வந்திருந்தனர்.
இந்த சந்திப்பு சுமூகமாக இருந்தது. ஆளுநரும், முதலமைச்சரும் பரஸ்பரம் மரியாதையைப் பரிமாறிக் கொண்டு, மாநிலம் தொடர்பான பல்வேறு பிரச்னைகள் குறித்து தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். ஆளுநரும், தமிழ்நாட்டு மக்களின் நலனில்தான் முழு ஈடுபாட்டைக் கொண்டிருப்பதாக மீண்டும் வலியுறுத்தினார்.
இந்திய அரசியலமைப்பின் வரம்புக்கு உட்பட்டு மாநில அரசுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாகவும் ஆளுநர் உறுதியளித்தார். மேலும், தமிழக மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, முதலமைச்சரும் இது போன்ற சந்திப்புகளை அவ்வப்போது தமிழக ஆளுநருடன் நடத்த வேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 2 முன்னாள் அதிமுக அமைச்சர்களின் கோப்புகளை மேற்கோள் காட்டிய முதலமைச்சர்.. விரைந்து ஒப்புதல் வழங்க வலியுறுத்தல்!