சட்டப்பேரவையில் ஒவ்வொரு கட்சிக்கும் உள்ள ஒட்டுமொத்த எம்எல்ஏக்களின் எண்ணிக்கை அடிப்படையில் மாநிலங்களவை உறுப்பினர்கள் நியமிக்கப்படுகின்றனர். ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியைப் பெற 34 எம்எல்ஏக்கள் தேவை என்ற அடிப்படையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் தற்போது அதிமுகவுக்கு சபாநாயகரையும் சேர்த்து 123 எம்எல்ஏக்கள் உள்ளனர். இந்த எண்ணிக்கைப்படி பார்த்தால், அந்தக் கட்சிக்கு மூன்று மாநிலங்களவை உறுப்பினர்கள் என்பது உறுதியாகியுள்ளது. அதேசமயம், 21 எம்எல்ஏக்கள் உபரியாகவே இருப்பர்.
திமுகவைப் பொறுத்தவரை இடைத்தேர்தலில் 13 இடங்கள் கூடுதலாகப் பெற்றதால் சட்டப்பேரவையில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 101 ஆக உயர்ந்துள்ளது. காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளைச் சேர்த்தால் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 110ஆக உள்ளது. எனவே, காலியாகும் ஆறு மாநிலங்களவை இடங்களில் திமுகவுக்கும் மூன்று இடங்கள் கிடைக்கும்.
பேரவையில் இப்போதுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில் காலியாகப் போகும் ஆறு மாநிலங்களவை உறுப்பினர் இடங்களை திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் சரிபாதியாக பிரித்துக் கொள்ளும். இதனால் ஆறு பேர் போட்டியின்றி தேர்வாக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
மக்ளவைத் தேர்தலில் அதிமுக பாமகவுடன் கூட்டணி அமைக்கும்போது பாமகவுக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி தரப்படும் என உடன்பாடு செய்துள்ளது. எனவே, இந்த ஒப்பந்தப்படி பாமகவுக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுத்தால், பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் மாநிலங்களவை உறுப்பினராக வாய்ப்புள்ளது. அதிமுக சார்பில் கே.பி.முனுசாமி மாநிலங்களவை உறுப்பினராக வாய்ப்புள்ளது.
திமுகவை பொறுத்தவரை மதிமுகவுக்கு ஒரு இடம் தருவதாக அறிவித்துள்ளது. அதன்படி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மாநிலங்களவை உறுப்பினராவார் எனத் தெரிகிறது. கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு திமுக சார்பில் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் உள்ள 18 மாநிலங்களவை உறுப்பினர்களில் லட்சுமணன், மைத்ரேயன், கே.ஆர்.அர்ஜுனன், ரத்னவேல் ஆகிய அதிமுக உறுப்பினர்கள், கம்யூனிஸ்ட் டி.ராஜா, திமுகவின் கனிமொழி ஆகியோருக்கான பதவிக் காலம் ஜூலை 24ஆம் தேதியுடன் முடிகிறது.
புதிய உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான பணிகள் அடுத்த மாதத்தில் இருந்து தொடங்கவுள்ளன. தற்போது அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக உள்ள முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கின் பதவிக் காலம் வரும் ஜூன் 14ஆம் தேதியுடன் முடிகிறது. அஸ்ஸாமில் 2, தமிழ்நாட்டில் 6 என மொத்தம் 8 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு வரும் ஜூனில் தேர்தல் நடக்க உள்ளது. தமிழ்நாட்டில் திமுக காங்கிரஸ் கட்சிக்கு தரலாம் என கூறப்படும் ஒரு பதவி மன்மோகனுக்கு கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.