சென்னை: ராஜாஜியின் கொள்ளுப் பேரன் சி.ஆர்.கேசவன் கடந்த 2001ம் ஆண்டு காங்கிரசில் இணைந்தார். இதைத் தொடர்ந்து காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளையின் அறங்காவலர், ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தின் துணைத் தலைவர், காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் என பல்வேறு பதவிகள் அவருக்கு வழங்கப்பட்டன.
இந்நிலையில் காங்கிரஸ் அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட, அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக கேசவன் அறிவித்துள்ளார். இதுகுறித்து காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், "வெளிநாட்டில் வாழ்ந்த நான், நம் நாட்டுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற நோக்கில் காங்கிரசில் இணைந்தேன். அதன் அடிப்படையில் எனக்கு பல்வேறு பொறுப்புகள் வழங்கப்பட்டன. அதுமட்டுமின்றி சோனியா காந்தியின் நட்பும் கிடைத்தது.
ஆனால், கட்சிக்காக 20 ஆண்டுகள் உழைத்தும், எந்த ஒரு மதிப்பையும் நான் பெறவில்லை. தற்போது காங்கிரஸ் கட்சி எதை அடையாளப்படுத்துகிறதோ, அதை என் மனசாட்சி ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால் தான் அண்மையில் தேசிய அளவிலான நிறுவன பொறுப்பை நிராகரித்தேன். தேசிய ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்பதை தவிர்த்தேன்.
நான் ஒரு புதிய பாதையை வகுக்க வேண்டிய நேரம் இது. எனவே காங்கிரஸ் கட்சியின் முதன்மை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறேன். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளையின் அறங்காவலர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தது குறித்த கடிதத்தை, உரிய அதிகாரியிடம் சமர்பித்துள்ளேன். ஒரு அரசியல் தளத்தின் மூலம் நமது நாட்டுக்கு உறுதியுடன் சேவை செய்ய நல்லெண்ணத்துடன் முயற்சி செய்வேன்" என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: மகளிருக்கு ரூ.1000 உரிமைத் தொகை - விரைவில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு என தகவல்!