சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சிங்காரச்சென்னை 2.O திட்டத்தின்கீழ் ரூ.176.94 கோடி மதிப்பில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளுக்கான பணி ஆணைகள் மேயர் பிரியா ஒப்பந்ததாரர்களுக்கு இன்று (மார்ச்.14) வழங்கினார்.
திருப்புகழ் தலைமையில் வல்லுநர்களைக் கொண்ட வெள்ளமேலாண்மை குழுவின் ஆலோசனைப்படி ராயபுரம், தேனாம்பேட்டை மற்றும் கோடம்பாக்கம் மண்டலங்களில் ரூ.186 கோடி மதிப்பில் சிங்காரச்சென்னை 2.O திட்டத்தின்கீழ் மழைநீர் வடிகால் பணிகளுக்கு ஒப்பம் கோரப்பட்டு இறுதிசெய்யப்பட்டுள்ளது.
பகுதிகளின் விவரம்:
அதில் ராயபுரம் மண்டலத்தில் உள்ள சைடன் ஹாம்ஸ் சாலையில் ரூ.24.04 கோடி மதிப்பிலும், அம்பேத்கர் கல்லூரி சாலை, டெமலஸ் சாலை மற்றும் டிக்காஸ்டர் சாலையில் ரூ.22.09 கோடி மதிப்பிலும், தேனாம்பேட்டை மண்டலத்தில் சீத்தம்மாள் காலணி பகுதியில் ரூ.25.89 கோடி மதிப்பிலும், தியாகராயநகர் அபிபுல்லா சாலையில் ரூ.2.85 கோடி மதிப்பிலும், பசுல்லா சாலையில் ரூ.21.13 கோடி மதிப்பிலும், கோடம்பாக்கம் மண்டலத்தில் விருகம்பாக்கம் வேம்புலியம்மன் கோயில் தெருவில் ரூ.21.58 கோடி மதிப்பிலும், அசோக் நகர் 18ஆவது நிழற்சாலையில் ரூ.6.88 கோடி மதிப்பிலும், பராங்குசபுரம் பகுதியில் ரூ.9.15 கோடி மதிப்பிலும், முனுசாமி சாலையில் ரூ.15.16 கோடி மதிப்பிலும், கே.கே. நகர் ராஜமன்னார் சாலையில் ரூ.28.17 கோடி மதிப்பிலும் மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொள்ள ஒப்பம் இறுதிசெய்யப்பட்டுள்ளது.
ரூ.176.94 கோடி ஒப்பந்தப் பணிகளுக்கான பணி ஆணைகள் மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி முன்னிலையில் ஒப்பந்ததாரர்களுக்கு இன்று வழங்கப்பட்டது. இந்தப்பணிகளை உடனடியாக தொடங்கி வருகின்ற பருவ மழைக்கு முன்னதாக முடிக்க வேண்டுமென ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும் தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க நகர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் மற்றும் அடையாறு ஆகிய மண்டலங்களில் உலக வங்கி நிதி உதவியுடன் ரூ.119.33 கோடி மதிப்பில் 45 கி.மீ நீளத்திற்கு மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளும் புளியந்தோப்பு பகுதியில் ரூ.7.40 கோடி மதிப்பில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளும் ஏற்கெனவே நடைபெற்றுவருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மேகதாது விவகாரத்தில் திமுக ஆட்சி விடியல் தருமா? டிடிவி தினகரன் கேள்வி