சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னையில் கடந்த சில நாட்களாக கன முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகள், சாலைகள், குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று (நவ. 13) இரவு முதல் பெய்த கனமழை காரணமாக சென்னை முகலிவாக்கம், திருவள்ளுவர் நகர் மற்றும் அதன் சுற்றியுள்ள தெருக்களில் மழைநீர் இடுப்பளவிற்கு தேங்கியுள்ளது.
இதனால் பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியே வரமுடியாமல் தவித்துக் கொண்டிருந்தனர். இதையடுத்து தீயணைப்புத் துறையினர் 24 பேர் மூன்று குழுக்களாக பிரிந்து படகுகள் மூலம் பொதுமக்களை பத்திரமாக மீட்டனர். பின்னர் அவர்களை அரசு முகாம்களில் தங்க வைத்தனர்.
பூந்தமல்லி, விருகம்பாக்கம், சைதாபேட்டை ஆகிய மூன்று தீயணைப்பு நிலையத்திலிருந்து படகுகளை கொண்டு வந்து தீயணைப்புத் துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும் செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பியதன் காரணமாக அங்கிருந்து வெளியேறும் உபரிநீர் கால்வாயில் நிரம்பி அப்பகுதி முழுவதும் சூழ்ந்துள்ளது. அதனை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் மின் மோட்டார் வைத்து தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர்.
இதையும் படிங்க: வாழை உள்ளிட்ட பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதம் - விவசாயிகள் வேதனை