வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று (அக்.4) தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிகக் கனமழை பெய்யும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "டெல்டா மாவட்டங்கள், சிவகங்கை, கன்னியாகுமரி, கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, விருதுநகர், திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களில் இன்று (அக்.4) ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.
ஏழு மாவட்டங்களில் கனமழை
அரியலூர், பெரம்பலூர், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் நாளை (அக்.4) ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிகக் கன மழையும் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கரூர், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், சேலம், நாமக்கல் மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
அக்டோபர் 6: கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, அரியலூர் பெரம்பலூர் மாவட்டங்களில் நாளை மறுநாள் (அக்.6) ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.
அக்டோபர் 7: வட மாவட்டங்கள் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் மிதமான மழையும், தென் மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக் கூடும்.
அக்டோபர் 8: மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
சென்னையின் வானிலை நிலவரம்
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரியும் இருக்கும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
வங்கக் கடல்: இன்றும், நாளையும் தென் மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். அதனால் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திண்டுக்கல் அருகே இடி தாக்கி இருவர் படுகாயம்