சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று(பிப்.26) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று வறண்ட வானிலை நிலவக்கூடும். தென்தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை முதல் மார்ச் 1ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மார்ச் 2ஆம் தேதி வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் தெளிவாக காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக ஈரோட்டில் 38.2 டிகிரி செல்சியஸ், கரூர் பரமத்தியில் 37 டிகிரி செல்சியஸ், மதுரை விமான நிலையத்தில் 36.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. குறைந்த பட்சமாக கொடைக்கானலில் 20.2 டிகிரி செல்சியஸ், குன்னாரில் 23 டிகிரி செல்சியஸ், உதகமண்டலத்தில் 24.4 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மழை பதிவாகவில்லை. கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை" என்று குறிப்பிட்டுள்ளது.