சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று(மார்ச்.22) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று(மார்ச் 22) ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை (மார்ச் 23) ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் 24ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 முதல் 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் 9 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மதுரை மாவட்டம், திருமங்கலம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் மிமிசலில் தலா 5 சென்டி மீட்டர் மழைப் பதிவாகியுள்ளது.
தஞ்சை வெட்டிக்காடு பகுதியில் 4 சென்டி மீட்டரும், மதுரை விமான நிலையம், தருமபுரி மாரண்டஹள்ளி, புதுக்கோட்டை நகுடி உள்ளிட்ட இடங்களில் தலா 3 சென்டி மீட்டர் மழைப் பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம், புதுக்கோட்டை மாவட்டம் ஆயின்குடி, கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் தலா 1 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதும் இல்லை" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கோடை வெயில் அதிகரித்துக் காணப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களாக ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையில் கடந்த 17ஆம் தேதி பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. கடந்த ஓரிரு நாட்களாக சென்னையில் ஒரு சில இடங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. வேலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. சில இடங்களில் ஆலங்கட்டி மழை கொட்டியது.
இதையும் படிங்க: கோடை விடுமுறையை முன்னிட்டு பெங்களூரு - வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரயில் இயக்கம்