சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (டிச. 23) காலை நிலவரப்படி, நாகப்பட்டினத்திலிருந்து சுமார் 480 கிலோமீட்டர் கிழக்கே நிலை கொண்டுள்ளது. இது, அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு - தென்மேற்கு திசையில் இலங்கை வழியாக குமரிக்கடல் பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக நாளை (டிச. 24) தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை மறுநாள் (டிச.25) தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 26ஆம் தேதி தென் தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வட தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தேனி, தென்காசி, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வரும் 27ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும், அதிகபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 26ஆம் தேதி வரை, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப்பகுதிகள், தமிழக கடலோரப்பகுதிகள், குமரிக்கடல் பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் வரும் 27ஆம் தேதி, குமரிக்கடல் பகுதிகள், கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மீண்டும் கரோனா: பரவலைத் தடுக்க நடவடிக்கைகள் தீவிரம் - முதலமைச்சர் உறுதி