திருநெல்வேலியை சேர்ந்த தம்பதியினர் சென்னை விருகம்பாக்கத்தில் பூங்காவனம் என்பவரது வீட்டில் வாடகைக்கு தங்கிக்கொண்டு வடபழனியில் சூப் கடை நடத்தி வருகின்றனர்.
இவர்களது ஒன்பதாவது படிக்கும் மகள் ஜனவரி 20ஆம் தேதி மாலை, வீட்டு வாசலில் கோலம் போடுவதற்காக வெளியே வந்துள்ளார். அப்போது வீட்டு உரிமையாளரின் மகனான விக்கி (எ) விக்னேஷ் (26) என்பவர் சிறுமியை வாயில் துணியை வைத்து வீட்டுக்குள் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமியின் பெற்றோர் வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
![pocso](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-05-pocso-arrest-script-7202290_25012021163256_2501f_1611572576_433.jpg)
இந்தச் சம்பவம் குறித்து வடபழனி அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள குற்றவாளியை தேடி வந்தனர். இந்த நிலையில் நண்பர்கள் வீட்டில் தலைமறைவாக இருந்த விக்னேஷை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். காவல் துறையினரின் முதல்கட்ட விசாரணையில், விக்கியும் பள்ளி மாணவியும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்ததாக தெரியவந்துள்ளது. மேலும் விக்னேஷ் ரயில்வே ஊழியர் என்பதும் தெரியவந்துள்ளது.