சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமாக வந்த இரண்டு வெவ்வேறு பயணிகளிடம் நடத்திய விசாரணையில் கணக்கில் காட்டப்படாத 36 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். மேலும் இதுகுறித்து விசாரணையில் பணம் குறித்த ஆவணங்கள் ஏதும் இருவரிடமும் இல்லாததால் பணத்தைப் பறிமுதல் செய்த ரயில்வே பாதுகாப்பு படை போலீசார், அதனை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
நாட்டின் முக்கியமான, பெரிய ரயில் நிலையங்களில் ஒன்றாகத் திகழ்வது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம். இது தெற்கு ரயில்வேயின் சென்னை ரயில்வே கோட்டக் கட்டுப்பாட்டின்கீழ் செயல்படுகிறது. இந்த ரயில் நிலையத்தில் அவ்வப்போது சட்டவிரோதமாக பல பொருட்களை கடத்தி செய்து வந்து விற்பது வழக்கமாக உள்ளது.
சட்டவிரோதமாக கடத்தப்படும் பொருட்களை தடுக்கும் விதமாக ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்று (ஆகஸ்ட். 22) பெங்களூருவில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் வரை செல்லக்கூடிய ரயிலில் பயணம் செய்த பயணி சந்தேகிக்கும் வகையில் நடந்து கொண்டதை அடுத்து அவரிடம் ரயில்வே போலீசார் விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் பெங்களூருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (வயது 53) என்பது தெரிய வந்தது. அவரிடம் நடத்திய சோதனையில் கணக்கில் காட்டப்படாத 25 லட்சம் ரூபாய் பணம் இருந்ததாக போலீசார் தெரிவித்து உள்ளனர். பணம் குறித்து விசாரிக்கையில் சௌகார்பேட்டையில் உள்ள நகைக்கடையின் உரிமையாளரிடம் பணம் கொடுக்க வந்ததாக தெரிவித்துள்ளார்.
அதே போல ஹைதராபாத் முதல் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடையும் ரயிலில் வந்த பயணி ஒருவரிடம் போலீசார் நடத்திய சோதனையில் அவரிடம் கணக்கில் வராத 11 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். இது குறித்து அந்த பயணியிடம் நடத்திய விசாரணையில் ஆந்திர பிரதேசம் குண்டூரை சேர்ந்த வாசு (42) என்பதும் நகைகள் வாங்குவதற்காக சௌகார்பேட்டைக்கு வந்து இருப்பதாகவும் தெரிவித்ததாக போலீசார் கூறினர்.
இந்த இரு வேறு சம்பவங்களிலும் பணத்திற்கு உண்டான ஆவணங்கள் ஏதும் இல்லை என்றும் அதனால் இருவரிடம் இருந்தும் ரூபாய் 36 லட்சத்து 98 ஆயிரம் பணத்தைப் பறிமுதல் செய்த ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் அதனை வருமான வரித்துறையிடம் ஒப்படைத்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் கைப்பற்றப்பட்ட பணம் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுத்துவதற்காக கடத்தி வரப்பட்ட ஹவாலா பணமா என்றும் விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.