கரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. பொது இடங்களில் மக்கள் அதிகம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என இரு அரசுகளும் மாறி மாறி வலியுறுத்தி வருகின்றன. சில மாநிலங்களில் பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள், மால்கள் என அனைத்தையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில் ரயில் பயணிகளின் பாதுகாப்பு கருதி பல அதிரடி உத்தரவுகளை தென்னக ரயில்வே பிறப்பித்துள்ளது. அதன்படி நாளை முதல் பயணிகளுக்கு தெர்மல் ஸ்கீரினிங் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. ரயில் நிலையங்களில் மக்கள் அதிகம் கூடுவதைத் தவிர்க்க பிளாட்பார்ம் டிக்கெட் விலையை உயர்த்தியுள்ளது.
அதன்படி சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ஆகிய மூன்று ரயில் நிலையங்களில் பிளாட்பார்ம் டிக்கெட் பத்து ரூபாயிலிருந்து 50 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. உடனடியாக இந்தக் கட்டண உயர்வு அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 31ஆம் தேதி வரை இது நடைமுறையில் இருக்கும் எனவும், பயணம் செய்யாதவர்கள் ரயில் நிலையம் வருவதைத் தடுக்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கரோனா எதிரொலி: பிரேசிலில் 1,500 கைதிகள் தப்பியோட்டம்!