சென்னை: குடும்பத்தகராறு காரணமாக ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ளுதல்,குறைவான மதிப்பெண் பெற்றதால் மனமுடைந்த மாணவர்கள் மரணித்தல், ரயில் தண்டவாளத்தைக் கடக்கும் போது நேரிடும் மரணம் என ரயில்களில் அடிபட்டு மரணிப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமாக இருந்தது.
குறிப்பாக கடந்த 2018ஆம் ஆண்டு விபத்தில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 2, 517. அதில் ஆண்கள் 2,173. பெண்கள் 344. அதுதொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் 2,502. கடந்த 2019ஆம் ஆண்டு 2,619 மரணங்கள் நிகழ்ந்துள்ளன. அதில் 2,292 பேர் ஆண்கள், 327 பேர் பெண்கள். அதுதொடர்பாக 2,600 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ரயில்வே மற்றும் பாதுகாப்புப்படை காவல் துறையினர் இணைந்து விபத்துகளை குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். குறிப்பாக, அதிக ரயில் விபத்துகள் நடைபெறும் இடங்கள், தண்டவாளத்தைக் கடக்கும் பாதைகள், தண்டவாளம் அருகேயுள்ள கிராமங்கள், பள்ளி, கல்லூரிகள் என கடந்த ஆண்டு மட்டும் ரயில்வே காவல் துறையினர் 14, 845 விழிப்புணர்வு பரப்புரைகளை செய்தனர். இதன் பலனாக கடந்தாண்டு 1,137 விபத்து மரணங்கள் மட்டுமே நடந்துள்ளன. இதுதொடர்பாக 1,129 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது முந்தைய ஆண்டை ஒப்பிடுகையில் 57 விழுக்காடு குறைவு என தெரியவந்துள்ளது.
கரோனா ஊரடங்கு காரணமாக விபத்துகள் குறைந்திருக்கலாம் எனக் கூறப்படும் நிலையில், பொதுமக்களிடம் தாங்கள் ஏற்படுத்தியே விழிப்புணர்வே உயிரிழப்பு குறைவுக்குக் காரணம் என ரயில்வே காவலர்கள் தெரிவிக்கின்றனர்.