சென்னை: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்குச் சொந்தமான பல்வேறு இடங்களில் இன்று (ஆக.10) காலை முதல் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தினர்.
சென்னையில் மட்டும் 16 இடங்களில் சோதனை நடைபெற்றது. சேப்பாக்கத்தில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்கும் விடுதியில் எஸ்.பி.வேலுமணியிடம் விசாரணை நடத்தினர்.
அதைத் தொடர்ந்து முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், அதிமுகவின் வழக்கறிஞர் பிரிவு நிர்வாகியுமான பாபு முருகவேல் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், " முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்குச் சொந்தமான 53 இடங்களில் சோதனை நடைபெற்றது. சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்கும் விடுதியில் சோதனை மேற்கொள்ள அலுவலர்கள் முற்பட்டனர். சோதனை செய்வதற்கு அனுமதி வாங்காததால் மூன்று மணி நேரம் சோதனை நிறுத்தி வைக்கப்பட்டது.
லஞ்ச ஒழிப்பு துறையின் தோல்வி
பிறகு அனுமதி பெற்று சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் எந்த ஒரு துண்டுக் காகிதமும் கிடைக்கவில்லை. இது ஒரு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை, லஞ்ச ஒழிப்பு துறையினரின் தோல்வியாக பார்க்கிறோம். இதுபோல் பொய் வழக்குகளால் அதிமுகவை மிரட்டி பணிய வைத்து கழகத்திற்குள் சலசலப்பை ஏற்படுத்த ஆட்சியாளர்கள் எண்ணுகின்றனர்.
வழக்கில் வெற்றி பெறுவோம்
அதிமுக ஆட்சியில் எந்தத் தவறும் நடந்திருக்க வாய்பில்லை, பூதக்கண்ணாடி வைத்து பார்த்தாலும் குற்றத்தை நிரூபிக்க முடியாது. முதல் தகவல் அறிக்கை யார் வேண்டுமானாலும் பதிவு செய்யலாம் ஆனால் அந்த அறிக்கையில் முகாந்திரம் உள்ளதா, அதன் மீது மேல் நடவடிக்கை எடுக்க முடியுமா என்பதை நீதிமன்றம் முடிவு செய்ய முடியும்.
அந்த அடிப்படையில் இந்த வழக்கில் வெற்றி பெற்று வேலுமணி குற்றமற்றவர் என்று நிரூபிக்க பிரகாசமாக வாய்ப்புள்ளது. கைப்பற்றப்பட்டுள்ள 13 லட்சம் ரூபாய்க்கான ஆவணங்கள் எங்களிடம் முறையாக உள்ளது. வருமான வரித்துறைக்கு கணக்குகளை காட்டி விடுவோம்" என்று அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சொகுசு கார் விவகாரம் - நுழைவு வரி செலுத்தினார் விஜய்!