கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில், திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் இன்பதுரை 69,590 ஓட்டுகளும், திமுக வேட்பாளர் அப்பாவு 69,541 ஓட்டுகளும் பெற்று 49 வாக்குகள் வித்தியாசத்தில் இன்பதுரை வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
இதையடுத்து, அதிமுக சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரையின் வெற்றியை எதிர்த்து அப்பாவு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வாக்கு எண்ணிக்கையின் போது 203 தபால் வாக்குகளை தேர்தல் அலுவலர்கள் எண்ணாமல் நிராகரித்து விட்டதாகவும், அந்த வாக்குகளை எண்ண தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் எனவும் அவர் தன் மனுவில் கோரியிருந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், ராதாபுரம் தொகுதி தேர்தலில் எண்ணப்பட்ட 1,92,021 ஆகிய சுற்று வாக்குகளையும், தபால் வாக்குகளையும் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும். ராதாபுரம் தொகுதியில் பதிவான மின்னனு வாக்கு பதிவு இயந்திரங்களை உயர்நீதிமன்ற பதிவாளரிடம் அக்டோபர் 4ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையம் வழங்க வேண்டும் என இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.
இதையடுத்து, நீதிபதியின் உத்தரவுக்கு தடை கேட்டு எம்எல்ஏ இன்பதுரை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அவசர வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், உத்தரவுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இன்பதுரை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்ற இடைக்கால உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், உயர்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தக் கூடாது என வாதம் செய்தார்.
திமுக வேட்பாளர் அப்பாவு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தேர்தல் வழக்கில் உயர்நீதிமன்றம் எந்தவித தடை உத்தரவும் பிறப்பிக்காமல், இடைக்கால உத்தரவே பிறப்பித்துள்ளது. அதனால், வாக்கு எண்ணிக்கைக்கு பிறகே நீதிமன்றத்தை தடை கேட்டு அணுக முடியும் என்று தெரிவித்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கில் எந்த இறுதி உத்தரவும் இதுவரை பிறப்பிக்கப்படாததால், எம்எல்ஏ இன்பதுரையின் அவசர வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. நீதிமன்ற உத்தரவின்படி மறுவாக்கு எண்ணிக்கைக்காக தபால் வாக்குகள் மற்றும் மின்னணு வாக்கு பதிவு ஆவணங்களை அக்டோபர் 4ஆம் தேதி நீதிமன்ற பதிவாளரிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற உத்தரவில் எந்தவித மாற்றமும் இல்லை என தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ராதாபுரம் தொகுதியில் பதிவான அஞ்சல் வாக்கு, இயந்திரங்கள் சென்னைக்கு அனுப்பிவைப்பு!