இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஸ்விக்கி உள்ளிட்ட ஆன்லைன் நிறுவனங்களின் மூலம் உணவு ஆர்டர் செய்யும் போது, உண்மையான விற்பனை விலையை விட 20 முதல் 30 விழுக்காடு வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, உணவு வழங்குவதற்கான விநியோகக் கட்டணமாக 50 ரூபாய் முதல் 125 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது.
ஆனால், தற்போது ஸ்விக்கி பணியாளர் ஒருமுறை உணவு விநியோகிக்க 15 ரூபாய் மட்டுமே வழங்கப்படுவதாலும், தினமும் 20 முறை மட்டுமே ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படுவதாலும் அவர்களுக்கு நாள் ஒன்றுக்கு 300 ரூபாய் மட்டும் தான் வருமானமாகக் கிடைக்கிறது.
அதிலும் உணவு மற்றும் எரிபொருள் செலவு 200 ரூபாய் போக 100 ரூபாய் கூட நிகர வருமானம் கிடைப்பதில்லை. இதனால் சென்னை மக்களுக்கு உணவு விநியோகிக்கும் ஸ்விக்கி பணியாளர்களின் குடும்பத்தினருக்கு உணவு கிடைப்பதில்லை.
ஊதியக் குறைப்பைக் கண்டித்து ஸ்விக்கி ஊழியர்கள் கடந்த ஒரு வாரமாக போராட்டம் நடத்தி வரும் நிலையில், அவர்களுடன் பேச்சு நடத்தி பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு ஸ்விக்கி நிறுவனம் முன்வரவில்லை. அதேபோல், தொழிலாளர் நலத்துறை அலுவலர்களும் இந்த சிக்கலில் தலையிட்டு, இரு தரப்பையும் அழைத்துப் பேசி தீர்வு காணவில்லை.
கொள்ளை லாபம் பார்க்கும் நிறுவனங்கள் தங்களின் தொழிலாளர்களுக்கு 40 ரூபாய் ஊதியம் வழங்க மறுப்பது நியாயமல்ல. எனவே, ஸ்விக்கி நிறுவனம் உடனடியாக அதன் உணவு விநியோகப் பணியாளர்களை அழைத்துப் பேசி, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வர வேண்டும். இதற்குத் தேவையான ஏற்பாடுகளை தொழிலாளர் நலத்துறை மேற்கொள்ள வேண்டும்" என தெரிவித்துள்ளார்.