இது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவில், கேரளத்திற்கு அடுத்தப்படியாக, தமிழ்நாட்டில் இருந்துதான் லட்சக்கணக்கான தொழிலாளர்கள், வளைகுடா நாடுகளிலும், அமெரிக்க, ஐரோப்பா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் கடந்த இரண்டு மாதங்களாக நாடு திரும்ப வழி இல்லாமல் தவிக்கின்றார்கள்.
வந்தே பாரத் அறிவிப்பின் கீழ், முதல்கட்டமாக, ஒருசில விமானங்கள் மட்டுமே தமிழ்நாட்டுக்கு வந்தன. அதிலும், சவுதி அரேபியாவில் சிக்கியுள்ள ஏராளமான தமிழர்களை மீட்க ஒரு விமானம் கூட ஒதுக்கப்படவில்லை. தற்போது இரண்டாம் கட்டமாக அறிவிக்கப்பட்டுள்ள 176 விமானங்களில் ஒரு விமானம் கூட தமிழ்நாட்டிற்காக அறிவிக்கப்படவில்லை. இது தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதையே காட்டுகிறது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள், மூன்று மாதங்களாக ஈரான் நாட்டில், படகுகளில் தங்க வைக்கப்பட்டு இருக்கின்றார்கள். அவர்களை மீட்கவும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மலேசிய மக்களைத் திருப்பி அனுப்பிய விமானத்தில் இந்தியர்களை அழைத்துச் செல்ல அந்நாட்டு அரசு அனுமதியளித்தும் மத்திய அரசு நிராகரித்துவிட்டது. அதுமட்டுமின்றி விமானங்களுக்கான கட்டணங்களைக் குறைக்குமாறு வலியுறுத்திவரும் நேரத்தில் கட்டணங்களை உயர்த்தியுள்ளது வேதனையளிக்கிறது.
ரயில்வே துறையில் அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு ரயில்களில் சில ரயில்கள் மட்டுமே தமிழ்நாட்டிற்கு வருகின்றன. பொதுப் போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டுள்ள இச்சமயத்தில், வெளி மாநிலம், வெளி மாவட்டங்களில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க மத்திய அரசு விரைந்து செயல்பட வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஈரானில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாடு மீனவர்களை மீட்கக்கோரி முதலமைச்சருக்கு மனு!