தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து சரிவடைந்து வருகிறது. எனவே தரமான கல்வியை அளிப்பதற்கு பள்ளிக் கல்வித்துறை தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதற்காக ஆசிரியர்கள் கற்பிக்கும் பணியில் தொய்வு இருக்கிறதா என்பதை மாநில அளவில் உள்ள அலுவலர்கள் நேரடியாக கண்காணிக்க திட்டமிட்டுள்ளனர்.
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் அனைத்து தகவல்களும் பதிவு செய்து கல்வித் தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே அந்த இணையதளத்தில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் விபரத்தினை பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குனர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், "தமிழ்நாட்டில் செயல்படும் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 2012-13, 2013-14 ஆம் கல்வியாண்டு முதல் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை 1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை நடைமுறையில் உள்ளது.
பள்ளியில் பெறும் அறிவை தொடர்புபடுத்தி பொருள் உணரா மனப்பாட முறையிலிருந்து பாடநூல்களுக்குள் மட்டுமல்லாமல் அதற்கு வெளியில் இருந்து படிக்கும் ஆற்றலை வளர்த்து, பள்ளிக்கு வெளியே உள்ள வாழ்க்கையோடு தொடர்பு படுத்திடவும், பாடத்திட்டத்தினை செம்மைப்படுத்தி தேர்வு முறைகளை எளிதாக்கி வகுப்பறைச் செயல்பாடுகளுடன் இணைப்பது போன்ற அரிய கருத்துகள் தேசிய கல்விக் கொள்கை 2005 ஆம் ஆண்டில் விரிவாக கூறப்பட்டுள்ளது.
இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009ஆம் ஆண்டு தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
- இந்திய அரசின் அமைப்பு வட்டத்தில் குறிப்பிட்டுள்ள உள்ளார்ந்த மதிப்புகளை உள்ளடக்கியதாக்குதல்.
- குழந்தைகளின் ஒருங்கிணைந்த வளர்ச்சியை உறுதி செய்தல்.
- குழந்தைகளின் அறிவு, ஆற்றல் மற்றும் திறன்களை மேம்படுத்துதல்.
- உடல் மற்றும் உள்ளார்ந்த திறன்களின் ஒருமித்த வளர்ச்சியினை முடிந்த அளவு உறுதி செய்தல்.
- மாணவர்களை மையமாகக் கொண்டு நல்லிணக்கத்தோடு, செயல்பாடுகள் கண்டுபிடிப்புகள் மற்றும் அறியாதவைகளை புதிதாகக் கண்டறிதல் மூலமாக கற்றல்.
- இயன்றவரை கற்றல், கற்பித்தல் முறைகள், குழந்தைகளின் தாய்மொழியில் இருத்தல்.
- குழந்தைகள் தங்கள் உணர்வுகளை எவ்வித அச்சமும், மனச்சோர்வுகளும் இல்லாமல் வெளிப்படுத்தச் செய்தல்.
- தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு குழந்தைகளின் புரிதலுக்கு ஏற்ற விதத்திலும் அதை அவர்கள் தங்கள் திறமைக்கேற்ற விதத்தில் உபயோகப்படத்தக்கக் கூடிய விதத்திலும் இருத்தல்.
மேற்குறிப்பிட்ட விவரங்களின் அடிப்படையில் ஒவ்வொரு வகுப்பறையிலும் மாணவர்களின் செயல்திறன், அறிவு, உள்ளார்ந்த திறனை வளர்த்தல் மற்றும் செயல்பாடுகள் மூலம் கற்றலில் அச்சம், மன அழுத்தமின்றி, சுதந்திரமாக மாணவர்கள் வகுப்பறையில் தனது கருத்தினை அறிய செய்வது ஒவ்வொரு ஆசிரியருக்கும் உள்ளது.
ஒவ்வொரு காலாண்டு பருவத்திலும் ஒவ்வொரு வகுப்பறையிலும் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை செயல்படுத்தப்பட்டு, பல்வேறு செயல்முறைகளில் மாணவரின் எட்டு சிறந்த செயல்பாடுகளுக்கான மதிப்பீட்டினை பதிவு செய்து வைத்திருந்து அவற்றில் 4 சிறந்தவற்றுக்கு 40 மதிப்பெண் பதிவு செய்யலாம்.
காலாண்டு, முதல் பருவத் தேர்வில் தொகுத்தறி மதிப்பீடு (எழுத்துத் தேர்வு) 60 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்பட்டு அதனை பதிவு செய்திட வேண்டும்.
1 ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரையில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை கல்வித் தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில் பதிவு செய்திட வேண்டும்" என அறிவுறுத்தப்பட்டுள்ளது.