சென்னை: சைதாப்பேட்டை தொகுதிக்குட்பட்ட கிண்டி தொழிற்பள்ளி பின்புறம் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடங்களை பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ. வேலு, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் இன்று(அக்.20) ஆய்வு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எ.வ. வேலு, "சென்னையின் மையப்பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 7.15 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் இந்த இடத்தில் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் சமுதாய நலக்கூடம் அமைக்க வேண்டுமென தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து இந்த இடத்தில் சமுதாய நலக்கூடம் அமைக்க உள்ளோம். முட்புதர்கள் அகற்றப்பட்டு பணிகள் விரைவில் தொடங்கப்படும்.
பருவமழை முன்னெச்சரிக்கை
ஆக்கிரமிப்பு இடத்தில் பத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர், அவர்களை அப்புறப்படுத்த உள்ளோம். கள்ளக்குறிச்சி - திருவண்ணாமலை சாலை நான்கு வழிப்பாதையாக மாற்றுவதற்கான திட்ட மதிப்பீடுகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தாண்டு இறுதிக்குள் பணிகள் தொடங்கப்படும்.
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை பல துறைகள் இணைந்து மேற்கொண்டு வருகின்றன. எழும்பூர், புரசைவாக்கம் பகுதிகளில் மழைநீர் தேங்காமல் இருக்க மூன்று இடங்களில் தண்ணீர் போக்கிகள் (வடிகால்) அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
சென்னையில் மழை நீர் தேங்கும் இடங்களை கண்டறிந்து சீர் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. கடந்த காலங்களைப் போல் அல்லாமல் பருவ மழையின் போது சென்னையில் மழைநீர் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க அமைச்சர்களை முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்" என அமைச்சர் வேலு தெரிவித்தார்.
இதையும் படிங்க: விசாகா குழு விசாரணைக்குத் தடை கோரிய மனு: அரசு பதிலளிக்க உத்தரவு