2019 மக்களவை தேர்தலின் போது அதிமுக-பாஜக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி இடம்பெற்றிருந்த நிலையில், தற்போது கூட்டணிக்கு ஆதரவு அளிக்கப்போவதில்லை என்று டாக்டர். கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், 'நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய அளவில் தேசிய ஜனநாயக கூட்டணியிலும், தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான கூட்டணியிலும் புதிய தமிழகம் கட்சி இடம்பெற்றிருந்தது.
கூட்டணியின் போது மிக முக்கிய கோரிக்கையை முதலமைச்சரிடம் வலியுறுத்தியிருந்தோம். மருதநில மக்களாக குறிப்பிடப்பட்டுள்ள மக்களின் ஆறு உட்பிரிவுகளை ஒன்றாக்கி தேவந்திர குல வேளாளராக அழைத்திட அரசாணை வெளியிட வேண்டும் என்றும், அந்த மக்கள் தற்போது இடம்பெற்றுள்ள பட்டியல் பிரிவிலிருந்து மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என மத்திய அரசுக்கு வலியுறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தோம்.
தேர்தல் முடிந்தவுடன் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்ததால் நாங்கள் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றோம். ஆனால் தேர்தல் முடிந்து இதுவரை அந்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. முதலமைச்சர் இதில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து தேவந்திர குல மக்கள் தேர்தலை புறக்கணித்து பல்வேறு மாவட்டங்களில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு மதிப்பு அளிக்கக்கூடிய வகையில் அதிமுகவுக்கு ஆதரவு அளிக்கக்கூடாது என்று இன்று நடைபெற்ற கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு அளிக்கப்போவதில்லை.
நாங்கள் தொடர்ந்து ஏமாற்றப்படுகிறோம். எனவே இதேபோன்று ஒரு வாக்குறுதியை நம்பி புதிய தமிழகம் கட்சி இனியும் ஆதரவு தெரிவிக்க வழியில்லை. அரசாணை வெளியிடும் வரை ஆதரவு அளிக்கப் போவதில்லை' என்று தெரிவித்துள்ளார்.
‘மாவட்டங்களைப் பிரிப்பதால் எந்த வளர்ச்சியும் ஏற்படாது’ - கே. பாலகிருஷ்ணன்