சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் புதிய நீதிக் கட்சி இணைந்து செயல்படுவது குறித்து அக்கட்சியின் தலைவர் ஏசி சண்முகம் கட்சி நிர்வாகிகளுடன், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோரிடம் ஆலோசனை மேற்கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஏசி சண்முகம், "அதிமுக கூட்டணியில் நான்கு தொகுதிகளை ஒதுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளோம். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வேலூரில் போட்டியிட்ட புதிய நீதிக் கட்சி குடியாத்தம், கே வி குப்பம், அணைக்கட்டு தொகுதிகளில் திமுகவை விட அதிக வாக்குகள் பெற்றது. வரும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளோம். இதுகுறித்து முதலமைச்சர், துணை முதலமைச்சர் பரிசீலித்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
மேலும், அதிமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. குறிப்பாக, நீட் தேர்வினால் பாதிக்கப்பட்ட அரசுப் பள்ளி மாணவர்களின் நலனை மேம்படுத்தும் வகையில் 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்கியதன் மூலம் 480 மாணவர்கள் மருத்துவப்படிப்பில் சேர்ந்துள்ளனர். அதிமுக சட்டப்பேரவை தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: வீடு கட்ட எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 3 லட்சம் பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படை