சென்னை: ரயில்வே துறையைப் பொறுத்தவரை புறநகர், பயணிகள், எக்ஸ்பிரஸ் ரயில்களில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பயணிப்பதற்காக தனி ரயில் பெட்டிகள் ஒதுக்கப்படுகின்றன. அவற்றில் மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகளில், பிற பயணிகள் பயணிக்க அனுமதி இல்லை. கடந்த சில நாள்களாக மாற்றுத்திறனாளிகளுக்கான ரயில் பெட்டிகளில் ரயில்வே ஊழியர்கள் தொடர்ந்து பயணிப்பதாகப் புகார்கள் எழுந்தபடி இருந்தன.
இதனையடுத்து பிப்ரவரி 28 ஆம் தேதி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் 200-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள், தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்ட பொது மேலாளர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தங்களுக்காக ஒதுக்கப்படும் ரயில் பெட்டிகளில், ரயில்வே ஊழியர்கள் பயணிப்பதற்கு மாற்றுத்திறனாளிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இது தொடர்பாக ரயில்வே பாதுகாப்புப் படையின் சென்னை கோட்ட பாதுகாப்பு ஆணையர் செந்தில் குமார் உத்தரவொன்றை வெளியிட்டுள்ளார்.
அதன்படி மாற்றுத்திறனாளிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள ரயில் பெட்டிகளில், பயணிக்கும் ரயில்வே ஊழியர்களை வெளியேற்ற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சம்பந்தப்பட்டவர்கள் மீது ரயில்வே சட்டம் பிரிவு 155 (பி)-ன் கீழ் நடவடிக்கை எடுத்து, 500 ரூபாய் வரை அபராதம் விதிக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: உதகை தனியார் தங்கும் விடுதியில் தீ விபத்து