சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்தில் ஓபிஎஸ்-ஐ சந்தித்த பின்னர் அவரது ஆதரவாளரான புகழேந்தி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது முன்னாள் அமைச்சர் காமராஜ் அலுவலகத்தில் நடைபெற்ற ஐடி ரெய்டு குறித்து கேள்வி கேட்டபோது, "2017ஆம் ஆண்டு அமைச்சராக இருந்த காமராஜ் மீது அப்போதே புகார் கொடுத்தேன்.
அப்போது இருந்த அரசு அதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. திமுக ஆட்சிக்கு வந்த பின் லஞ்ச ஒழிப்புத் துறையில் இருந்து கடிதம் வந்துள்ளது. கடந்த ஆட்சியில் நியாய விலை கடைக்கு கொள்முதல் செய்யப்பட்ட பருப்பில் ஒரு கிலோவிற்கு 15 முதல் 30 ரூபாய் கொள்ளை அடித்துள்ளனர். 20 டன் எண்ணெய்யும் கொள்முதல் செய்யப்படுகிறது. அதிலும் அதிகப்படியான ஊழலை செய்துள்ளனர். அவர் ஊழல் செய்த பணம் பூமிக்கு அடியில் அடுக்கும் அளவிற்கு உள்ளது.
அவர் காமராஜ் என்ற பெயரை மாற்றிக்கொள்ள வேண்டும். லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகம் சென்று இதற்கு துணை போனவர்கள் யார் என்பது குறித்து கூற இருக்கிறேன். பொதுக்குழுவை யார் வேண்டும் கூட்டி கொள்ளலாம் என்று கூறப்பட்டு இருக்கிறது. நீதிமன்றம் நல்ல தீர்ப்பை அளிக்கும் என நம்புகிறேன்.
கடந்த 4 வருட எடப்பாடி பழனிசாமி ஆட்சி ஊழலுக்கு பெயர்போன ஆட்சியாக தான் நடைபெற்றது. இந்த லஞ்ச ஒழிப்பு சோதனைக்கு தமிழ்நாடு அரசை நான் பாராட்டுகிறேன். ஊழல் செய்த எடப்பாடி பழனிசாமி கூட்டத்தை ஜெயிலுக்கு அனுப்ப வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சரை அன்போடு கேட்டிக் கொள்கிறேன்" என கூறினார்.
இதையும் படிங்க: முன்னாள் அமைச்சர் காமராஜுக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை