சென்னை: புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தலில் இதர பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின வகுப்பினருக்கு உரிய வகையில் சுழற்சி முறை இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை எனக் கூறி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தேர்தல் அறிவிப்பை திரும்பப் பெற மாநில தேர்தல் ஆணையத்திற்கு அனுமதி அளித்தவுடன் ஐந்து நாட்களில் புதிய தேர்தல் அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று கடந்த அக்டோபர் 5ஆம் தேதி உத்தரவிட்டது.
உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை சுட்டிக்காட்டி, உள்ளாட்சி தேர்தலில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 33.5 விழுக்காடும், பழங்குடியினருக்கு 0.5 விழுக்காடும் ஒதுக்கீடு வழங்கி 2019ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பாணையை திரும்பப் பெற்று புதுச்சேரி அரசு அரசாணை பிறப்பித்தது. புதுச்சேரி அரசு பிறப்பித்த இந்த அரசாணைகளை எதிர்த்து புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவரும், திமுக அமைப்புச் செயலாளருமான சிவா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இந்த அரசாணைகள் பிறப்பிக்கும்போது அரசியல் சட்ட விதிகளை பின்பற்றவில்லை எனக் கூறி, தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்திவைக்க உத்தரவிட்டது.
இந்த வழக்குகள் பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் இன்று (நவ.30) மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது புதுச்சேரி அரசுத்தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், "உள்ளாட்சி தேர்தலில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கீடு வழங்குவது என்பது அரசின் கொள்கை முடிவு. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் குறித்த புள்ளி விவரங்கள் ஏதும் இல்லாததால், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் அரசியல் பின்தங்கிய நிலை குறித்து கணக்கெடுப்பு நடத்த ஆணையம் அமைக்க உள்ளது. இந்த ஆணையம் நியமனம் குறித்து ஒரு வாரத்தில் அறிவிப்பு வெளியிடப்படும்" என தெரிவித்தார்.
இந்த ஆணையம் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மனுதாரர் தரப்பில் வாதங்கள் முன் வைக்க அவகாசம் கோரியதையடுத்து, விசாரணையை நாளைக்கு (டிச.1) தள்ளிவைத்த நீதிபதிகள், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உள்ளாட்சி தேர்தலில் ஒதுக்கீடு வழங்குவது அரசியல் சட்டத்தில் கட்டாயப்படுத்தப்படவில்லை என்பதால், அதுகுறித்து விளக்கமளிக்கவும் மனுதாரர் தரப்புக்கு அறிவுறுத்தினர்.
இதையும் படிங்க: கடும் பணிச்சுமை: மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வை உடனடியாக நடத்த கோரிக்கை