சென்னை: தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தில் பேராசிரியர் அன்பழகள் நூற்றாண்டு நினைவாக அமைக்கப்பட்டுள்ள வெளியீட்டுப் பிரிவுப் புத்தக விற்பனை மையத்தை அமைச்சர்கள் உதயநிதி, அன்பில் மகேஷ் திறந்து வைத்தனர்.
இந்த மையத்தில் மொழிப்பெயர்ப்பு நூல்கள், குழந்தை இலக்கியங்கள், தமிழ் மருத்துவ நூல்கள், பிற மாெழியில் இருந்து தமிழுக்கு மொழி பெயர்க்கப்பட்ட திராவிட நூல்கள் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட 108 புத்தகங்கள் உட்பட 800-க்கும் மேற்பட்ட அரிய நூல்கள் விற்பனை செய்யப்பட உள்ளன.
பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் இருக்கும் டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கட்டடத்தில் நவீன முறையில் அமைக்கப்பட்டுள்ள மதிப்பீட்டுப் புலம் (Assessment cell), முன்னோட்டக் காட்சி அரங்கம் (Preview theatre) , விரிவுபடுத்தப்பட்ட 14417 உதவி எண்ணுக்கான அழைப்பு மையம் ஆகியவற்றை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் திறந்து வைத்தனர்.
அப்போது திரையில் தோன்றி பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ”மாணவர்களின் நலனுக்காக அயராது பாடுபட்டு வரும் ஆசிரியர் சமூகத்தை சிறப்பிக்கும் விதமாகவும் ஆசிரியர்களின் நலனைக் காக்கவும் புதிய திட்டங்களை செயல்படுத்த நமது அரசு முடிவு செய்துள்ளது. மாறிவரும் கற்றல், கற்பித்தல் முறைகளுக்கு ஏற்ப தங்களை சிறப்பாக மெருகேற்றிக் கொள்வதற்கென அனைத்து இடைநிலை மற்றும் பட்டதாரி
ஆசிரியர்களுக்கும் கைக்கணினி (Tablet) வழங்கப்படும்.
மாணவர் வாழ்க்கை ஏற்றம் காண அயராது உழைக்கும் ஆசிரியர் பெருமக்களின் உடல்நலம் காக்க அனைத்து ஆசிரியர்களுக்கும் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்யப்படும். உயர்கல்வி பயிலும் ஆசிரியர்களின் குழந்தைகளுக்காக தற்போது ஆசிரியர் நல நிதியிலிருந்து வழங்கப்பட்டு வரும் கல்விச்செலவு (tuition fee ) ரூ.50,000 வரை உயர்த்தி வழங்கப்படும்.
அரசின் நலத்திட்ட உதவிகளை மாணவர்களிடையே சிறப்பாக கொண்டு சேர்க்கும் ஆசிரியர்கள், வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச்செல்லப்படுவர். இந்த திட்டங்கள் சுமார் 225 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என்ற செய்தியை இந்தத் தருணத்தில் உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்” என முதலமைச்சர் ஆசிரியர்களுக்கான அறிவிப்புகளை வெளியிட்டார்.
இதையும் படிங்க: 'நிழலில் வேலை செய்ய ஆசைப்படுகிறோம்' - வேட்டைகார சமூக மக்கள் வேதனை