சென்னையில் கடந்த ஒரு சில நாள்காளக கனமழை பெய்து வருகிறது. இதனால், கொரட்டூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் 500க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்தது. இதையடுத்து, மூன்று நாட்கள் போராடி அரசு அலுவலர்கள் மழை நீரை வெளியேற்றியதால் இயல்பு நிலைக்கு திரும்பியது.
இந்நிலையில், நேற்று மாலை திடீரென மழை நீருடன் கழிவுநீர் கலந்து குடியிருப்புகளை சூழ்ந்தது. இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் அம்பத்தூர் பட்டரவாக்கம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக, அப்பகுதியில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின் கலைந்துசென்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், அம்பத்தூர் தொழிற்பேட்டை பட்டரைவாக்கம் போன்ற பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து மழை நீருடன் கழிவு நீரைக் கலந்து வெளியேற்றியதால் குடியிருப்புகளில் மழை நீருடன் கலந்த கழிவுநீர் சூழ்ந்துள்ளதாகக் குற்றஞ்சாட்டினர்.
உடனடியாக சென்னை மாநகராட்சி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர். உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மீண்டும் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபடப்போவதாக பொதுமக்கள் எச்சரித்துள்ளனர்.
இதையும் படிங்க: