கொருக்குப்பேட்டை கஸ்தூரி பாய் தெருவில் 300-க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்துவருகின்றனர். இந்தப் பகுதியில் குழாய் மூலமாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டுவருகிறது. தற்போது புதியதாக குடிநீர் வழங்க குழாய் இணைப்புகள் அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ளன.
கடந்த ஆறு மாதங்களாக கழிவுநீர், குழாய்களில் வரும் குடிநீரில் கலந்துவருவதாகவும் சாக்கடை கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு தெருவோரங்களில் சாக்கடைக் கழிவுநீர் தேங்கியிருப்பதால் காய்ச்சல், பல்வேறு நோய்களால் அவதியுறுவதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத குடிநீர் வாரிய அலுவலர்களைக் கண்டித்து கொருக்குப்பேட்டை எண்ணூர் நெடுஞ்சாலையில் அப்பகுதி மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த ஆர்.கே. நகர் காவல் துறையினர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தற்காலிமாக அப்பகுதி மக்களின் பயன்பாட்டிற்கு இரண்டு லாரிகளில் குடிநீரை வழங்க காவல் துறையினர் ஏற்பாடு செய்தனர். அதன்பிறகு மறியலை கைவிட்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர்.
இதையும் படிங்க: புதுக்கோட்டை சாலையில் பெருக்கெடுத்து ஓடும் பாதாளச் சாக்கடை: பொதுமக்கள் அவதி!