சென்னை: வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் பரவலாக பெய்து வருகிறது. இந்நிலையில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதியால், தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலும், சில உள் மாவட்டங்களிலும் மழையானது பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் காலை முதலே பரவலாக மழையானது பெய்து வருகிறது.
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இதன் காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதியில் நேற்று (நவ.13) மாலை முதல் மழை பெய்யத் தொடங்கியது. குறிப்பாக சென்னை தாம்பரம், குரோம்பேட்டை, திநகர் உள்ளிட்ட இடங்களில் நல்ல கனமழை பெய்தது. அதைத் தொடர்ந்து, இன்று (நவ.14) காலை 9 மணி முதலே சென்னையின் பல்வேறு இடங்களில் கனமழையும், ஒரு சில இடங்களில் மிதமான மழையும் பெய்தது.
இதனால், காலை அலுவலகம் செல்வோர் மழையால் தாமதமாகச் சென்றனர். மேலும், சென்னையின் முக்கிய சாலைகளான அண்ணாசாலை, ஈ.வே.ரா.பூவிருந்தவல்லி நெடுஞ்சாலை, அண்ணாநகர், காமராஜர் சாலை, ராஜிவ் காந்தி சாலை, உஸ்மான் சாலை, நந்தனம், சைதாப்பேட்டை போன்ற இடங்களில் போக்குவரத்து நெரிசல் காணபட்டது. மேலும் மழையால் சிலர் மெட்ரோ ரயிலில் பயணம் செய்தனர்.
மழை நீரை அப்புறப்படுத்தும் பணி: சென்னையில் பெய்த மழையால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். மேலும் காவல் துறை மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் தேங்கி இருந்த மழைநீரை அப்புறப்படுத்தினர். 22 சுரங்கப் பாதைகளிலும் மழைநீர் தேக்கம் ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது.
மேலும் தற்பொழுது பெய்து வரும் மழையின் காரணமாக பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் பாதிப்பு ஏற்படாத வண்ணம் தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில், அலுவலர்களுக்கும், அதிகாரிகளுக்கும் மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா அறிவுறுத்தி உள்ளார். அதில், “பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்கு ஏதுவாக நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட வேண்டும்.
மழையின் காரணமாக விழும் மரங்களையும், விழும் நிலையில் உள்ள மரங்களின் கிளைகளையும் உடனடியாக அகற்றிட வேண்டும். மழையின் காரணமாக சேதமடையும் சாலைகளை சீரமைத்திடவும், வண்டல் வடிகட்டித் தொட்டிகளில் ஏற்பட்டுள்ள குப்பைக் கழிவுகள் மற்றும் வண்டல்களை தொடர்ந்து அகற்றிடவும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்” என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மழைநீர் தேக்கம்: சென்னையின் முக்கிய பகுதியான திருவல்லிகேணி சாலையில் மழை நீரானது வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் மழை நீர் வடிகால் பணி பல்வேறு இடங்களில் நடைபெற்று வருவதால் மழை நீர் செல்ல வழியில்லாமல், நீரானது சாலையிலேயே தேங்கி நிற்கிறது.
சில்லென்ற சென்னை: காலை முதலே சென்னையில் பரவலாக மழை பெய்து வருவதால், இதமான சூழல் நிலவுகிறது. மேலும் சாரல் மழை மற்றும் கனமழை பெய்ததால், சென்னையே ஒரு மினி ஊட்டியாக மாறி உள்ளது.
ஓலா, ஊபர் வரவில்லை: சென்னையில் அலுவலகங்கள் மற்றும் வெளியில் செல்பவர்கள், ஓலா அல்லது ஊபர் மூலம் வாகனங்களை புக் செய்வது வழக்கம். ஆனால் இன்று (நவ.14) காலை முதலே மழை பெய்து வருவதால், வழக்கத்தைவிட இரண்டு மடங்கு விலை உயர்ந்து இருக்கிறது. மேலும் ஓலா செயலியில் முன்பதிவு செய்தாலும், அதிக கட்டணம் கேட்கப்படுகிறது. எனவே, வாகனங்கள் சரியாக வரவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மின் விநியோகம் துண்டிப்பு: சென்னையில் ஒரு சில இடத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருவதால் மகாலிங்கபுரம், அயப்பாக்கம், அம்பத்தூர், ஆவடி ஆகிய குறிப்பிட்ட இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் துண்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
அடுத்த இரண்டு தினங்களுக்கு: சென்னையில் பொதுவாக மிதமான மழை பெய்யக்கூடும், அவ்வப்போது ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இதையும் படிங்க: மழை விடுமுறையை ஈடு செய்ய சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும்: அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்