சென்னை: தமிழ்க்கடவுள் முருகனை வழிபடும் முக்கியத் திருவிழாவான 'தைப்பூசம்' திருவிழாவுக்கு பொதுவிடுமுறை அளித்தும் இனிவரும் ஆண்டுகளிலும் தைப்பூசத் திருவிழா நாளை பொதுவிடுமுறைப் பட்டியலில் சேர்க்கவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதற்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழர் இறைவன் முப்பாட்டான் முருகப் பெருந்தகையைப் போற்றிக்கொண்டாடும் தைப்பூசத் திருநாளை அரசு விடுமுறையாக அறிவித்திருப்பது மட்டற்ற மகிழ்ச்சியைத் தருவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழர்கள் மிகுதியாக வாழும் புதுச்சேரியிலும், கேரளாவில் தமிழர்கள் மிகுதியாக வாழும் பீர்மேடு, இடுக்கியில் தைப்பூசத் திருவிழாவை கொண்டாடும் விதமாக பொதுவிடுமுறை விடவேண்டும் என அந்தந்த மாநில முதலமைச்சர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில், "திருமுருகத் திருநாளை அரசு விடுமுறையாக தமிழக அரசு அறிவித்துள்ளது போன்று கேரள மாநிலத்திலும் இடுக்கி, பீர்மேடு போன்ற தமிழர் பகுதிகளில் வாழும் தமிழர்களும் திருமுருகத் திருநாளைக் கொண்டாடும் வகையில் அரசு விடுமுறை அளிக்கவேண்டுமென ஐயா பினராயி விஜயன் அவர்களை கேட்டுக்கொள்கிறேன்" எனவும், "தமிழர் இறைவன், முப்பாட்டன் முருகனைக் கொண்டாடும் திருமுருகத் திருநாளை தமிழ்நாட்டில் அரசு விடுமுறையாக அறிவித்திருப்பது போன்று தமிழர்களின் இன்னொரு தாய்நிலமாக விளங்கக்கூடிய புதுச்சேரியிலும் அரசு விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டுமென புதுச்சேரி முதலமைச்சர் ஐயா நாராயணசாமி அவர்களை கேட்டுக்கொள்கிறேன்" எனவும் ட்வீட் செய்துள்ளார்.
இதையும் படிங்க: 'எல்லாத்திற்கும் தலையை ஆட்டிக்கொண்டிருக்காமல் வேளாண் சட்டங்களை முதலமைச்சர் எதிர்க்க வேண்டும்'- சீமான்