சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,சென்னை மாவட்டத்தில் 2020ஆம் ஆண்டு 12,11,10 பொதுத் தேர்வுகள் நடைபெறவுள்ளன. 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வினை 47ஆயிரத்து301 தேர்வர்களும், 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வினை 46ஆயிரத்து 778 தேர்வர்களும் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வினை 49ஆயிரத்து 569 தேர்வர்களும் எழுத உள்ளனர்.
11,12ஆம் வகுப்பு தேர்வினை 161 மையங்களிலும், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வினை 215 மையங்களிலும் மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். பொதுத்தேர்வினைச் சிறப்பான முறையில் நடத்திட மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆய்வு அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் வருவாய் துறை, காவல் துறை, போக்குவரத்துத் துறை, மின்சார வாரியத் துறை, தீயணைப்புத் துறை, மற்றும் கல்வித் துறை சார்பில் முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர்கள் உள்ளிட்ட பிற உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் தேர்வுகளுக்கான அனைத்து முன்னேற்பாடுகளை மேற்கொள்ளவும், வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களுக்கு 24 மணி நேரம் ஆயுதம் ஏந்திய காவலர்கள் நியமனம் மேற்கொள்ளவும், தேர்வு மையங்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மேலும், தேர்வு எழுதச் செல்லும் மாணவர்கள் குறித்த நேரத்தில் தேர்வு மையங்களுக்குச் செல்ல பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்திடவும் தெரிவிக்கப்பட்டது. பொதுத் தேர்வினை எழுதும் மாணவர்களுக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் சீத்தாலட்சுமி தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 10,12ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கிய அமைச்சர் எஸ்.பி. வேலுமணி