சென்னை: வனவிலங்குகள் நல ஆர்வலரும், வழக்கறிஞருமான சொக்கலிங்கம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், "ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் புலிகள் மட்டுமின்றி சிறுத்தை, யானை, மான், காட்டெருமை போன்ற விலங்குகளும் உள்ளன. இந்த சரணாலயத்தின் வழியே பெங்களூரு செல்லும் சத்தியமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் மோதி வனவிலங்குகள் அடிக்கடி பலியாகின்றன.
இந்த சாலையில் 24 மணி நேரமும் கனரக வாகனங்களும், இலகு ரக வாகனங்களும் என தினமும் 5000 வாகனங்கள் வரை செல்கின்றன. கடந்த 2012 முதல் 2021 வரை 8 சிறுத்தைகள், ஒரு யானை, 71 மான்கள், 55 மயில்கள் என 155 வன விலங்குகள் வாகனங்களில் மோதி பலியாகியுள்ளன. எனவே, மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை கனரக வாகனப் போக்குவரத்துக்கும், இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை பிற வாகன போக்குவரத்துக்கும் தடை விதிக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
போக்குவரத்துக்கு தடை
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி டி.பரதசக்ரவர்த்தி அடங்கிய அமர்வு, சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தின் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வரும் கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி முதல் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை வாகன போக்குவரத்துக்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
கலெக்டரின் அறிக்கை
இந்த நிலையில், இந்த வழக்கில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன் உன்னி தாக்கல் செய்துள்ள அறிக்கையில், "உயர் நீதிமன்ற உத்தரவின்படி கடந்த மாதம் 10ஆம் தேதி முதல் சத்தியமங்கலம் புலிகள் சரணாலய சாலையில் மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணிவரை வணிக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். வழக்கு தொடர்ந்தவர்களிடம் ஆலோசனை பெற வேண்டும் என்று நீதிமன்றம் அறிவித்ததன் அடிப்படையில் ஆலோசனை நடத்தப்பட்டது.
சாலையை பயன்படுத்துவதில் விலக்கு
அதன்படி மனுதாரர்கள், அந்த சாலையில் இரவு 9 மணி முதல் மறுநாள் காலை 6 மணிவரை இலகு ரக வாகனங்களுக்கும் மாலை 6 மணி முதல் காலை 6 மணிவரை கன ரக வாகனங்களுக்கும் தடை விதிக்கலாம் மற்றம் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்களுக்கு விலக்கு அளிக்கலாம். வாகன நெரிசலைத் தவிர்க்க அந்த சாலையில் டோல் கட்டணம் வசூலிக்க விலக்கு அளிக்கப்பட வேண்டும். 16.2 டன்னுக்கு மேல் சரக்குகளை கொண்டு செல்லும் வாகனங்களைத் தவிர மற்ற வாகனங்கள் 20 கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல அனுமதிக்கலாம். தாளவாடி பகுதியில் வசிக்கும் மக்களுக்கு சாலையைப் பயன்படுத்துவதில் விலக்கு அளிக்க வேண்டும் என்று ஆலோசனை தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, சுற்றுச்சூழல் துறை, நெடுஞ்சாலைத்துறை முதன்மை செயலாளர்கள், தலைமை வனக்காப்பாளர், கூடுதல் வழக்கறிஞர் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் உள்ளிட்டோர் அடங்கிய அலுவலர்கள் கூட்டம் கடந்த 5ஆம் தேதி நடந்தது. இந்த கூட்டத்தில் அந்தப் பகுதி மக்களின் பிரச்னைகள், வாகன நகர்வு, வாகன நெரிசல் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
வாகனங்களுக்கு அனுமதி இல்லை
கூட்டத்தில், மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 5 மணிவரை 6 சக்கர வாகனங்கள் தவிர மற்ற வாகனங்களை இயக்க அனுமதிக்கலாம், இரவு 10 மணி முதல் காலை 5 மணிவரை மருத்துவ அவசரம், பொது போக்குவரத்து வாகனங்கள் தவிர மற்ற வாகனங்களுக்கு அனுமதி இல்லை.
அந்தப் பகுதி மக்கள் எந்த நேரத்திலும் உரிய அடையாள அட்டையுடன் அந்த சாலையில் செல்லலாம். காய்கறிகள், பழங்கள், பால் மற்றும் பால் பொருள்கள் இரவு நேரத்தில் செல்லலாம். ஒன்றிய சாலை போக்குவரத்து அமைச்சகத்திடம் உரிய உத்தரவு பெற்ற பிறகு சாலை நுழைவு கட்டணத்திற்கு விலக்கு அளிக்கப்படும். இருந்தபோதும் மனுதாரர்களின் கோரிக்கையின் அடிப்படையில் தற்போது உடனடியாக கட்டண விலக்கு அமல்படுத்தப்படவுள்ளது.
மாற்றுப்பாதையான அந்தியூரிலிருந்து கர்கேகண்டி சாலை தற்போது நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த சாலை சீரமைக்கப்பட்ட பிறகு வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும். புலிகள் சரணாலய சாலையில் வேகத்தை தடுக்க போதுமான வேகத்தடைகள் அமைக்கப்படும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்த ஈரோடு மாவட்ட அரசிதழில் திருத்தம் கொண்டுவரப்படும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: என் ஆட்சியில் யார் தவறு செய்தாலும் தண்டனை தான் - முதலமைச்சர் ஸ்டாலின்