சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023-24ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அதில், ''அரசுப் பணியாளர்கள், ஓய்வூதியதாரர்களின் நலனைப் பாதுகாப்பதில் இந்த அரசு கண்ணும் கருத்துமாக உள்ளது. பழைய அரசு அலுவலர் குடியிருப்புகள் படிப்படியாக புதிதாகக் கட்டப்படும். வரும் நிதியாண்டில் 100 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் மேற்கொள்ளப்படும்.
உயர்ந்து வரும் கட்டுமானச் செலவுகளைக் கருத்திற்கொண்டு, அரசுப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் வீடு கட்டும் முன்பணம் 40 லட்சம் ரூபாயிலிருந்து 50 லட்சம் ரூபாயாக வரும் நிதியாண்டிலிருந்து உயர்த்தப்படும். ஓய்வூதியதாரர் இறக்க நேரிட்டால், குடும்ப உறுப்பினர்களுக்கு 'தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்களின் குடும்பப் பாதுகாப்பு நிதித் திட்டத்தில்' நிதியுதவியாக 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.
கரோனா பெருந்தொற்றுக் காலத்திற்குப் பின்னர், இந்த நிதியுதவிக்கான கோரிக்கைகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. ஓய்வூதியர்களின் குடும்ப நலனைக் கருத்தில் கொண்டு 2021-22ஆம் ஆண்டில் 25 கோடி ரூபாயும், 2022-23ஆம் ஆண்டில் 50 கோடி ரூபாயும் சிறப்பு நிதியாக இந்த அரசு வழங்கியுள்ளது.
நிலுவையிலுள்ள விண்ணப்பங்களை தீர்வு செய்ய மேலும் 25 கோடி ரூபாய் சிறப்பு ஒதுக்கீடாக வழங்கப்படுகிறது. கரோனா பெருந்தொற்றின்போது உயிரிழந்த 401 முன்களப் பணியாளர்கள் குடும்பத்தினருக்கு, தலா 25 லட்சம் ரூபாய் வீதம் 100 கோடி ரூபாய் கருணைத்தொகை முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்டுள்ளது.
ஊதிய செலவினங்கள் அதிகரிப்பு: ஊதியச் செலவினங்களுக்காக 2023–24ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 77 ஆயிரத்து 240.31 கோடி ரூபாய் மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2022-23ஆம் ஆண்டு திருத்த மதிப்பீட்டைக் காட்டிலும் 14.14 விழுக்காடு அதிகரித்துள்ளதைக் காட்டுகிறது.
அகவிலைப்படி உயர்வு மற்றும் எதிர்பார்க்கப்படும் புதிய பணியமர்த்தம் ஆகியவற்றின் அடிப்படையில் ஊதியங்களுக்கான செலவினம் 2024-25ஆம் ஆண்டு மற்றும் 2025-26ஆகிய ஆண்டுகளுக்கு முறையே 84 ஆயிரத்து 964.34 கோடி ரூபாய் மற்றும் 94 ஆயிரத்து 460.78 கோடி ரூபாய் என எதிர்பார்க்கப்படுகிறது.
2023-24ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டில், சம்பளம் அல்லாத, செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பிற்கான செலவினம் 16 ஆயிரத்து 272.49 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த செலவினம், 2024-25ஆம் ஆண்டில் 17 ஆயிரத்து 574.29 கோடி ரூபாயாகவும், 2025-26ஆம் ஆண்டிற்கு 20 ஆயிரத்து 331.72 கோடி ரூபாயாகவும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
ஓய்வூதியம் மற்றும் ஏனைய ஓய்வுக்காலப் பயன்களுக்கான மதிப்பீடு 2023-24ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டில் 36 ஆயிரத்து 973.02 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. வரும் ஆண்டுகளில் ஓய்வுபெறுவோரின் அடிப்படையில், ஓய்வூதியம் மற்றும் ஏனைய ஓய்வுகாலப் பயன்களின் கீழ்வரும் செலவினங்கள், 2024-25ஆம் ஆண்டில் 39 ஆயிரத்து 930.86 கோடி ரூபாயும், 2025-26ஆம் ஆண்டில் 45 ஆயிரத்து 524.64 கோடி ரூபாயும் என மதிப்பிடப்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: அதிமுக ஆட்சியில் சிறப்பான பட்ஜெட்; அது ஓபிஎஸ்ஸால் தானே என மடக்கிய செய்தியாளர்; ஜெர்க் ஆன ஈபிஎஸ்!